சிவராமின் சில சிந்தனை துளிகள்…

sivaram2தமிழினத்தின் மிகச் சிறந்த ஊடகவியளாலரான தராகி டி.சிவராம் கொழும்பில் மரணத்துக்கு சிறிலங்கா அரசின் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழ் விரோதக் குழுக்களுமே காரணமாகும். சிவராமின் கொலைச் சம்பவம் தமிழ் மக்களிடத்திலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது

தராகி என்றும் டி.சிவராம் என்றும் நன்கறியப்பட்ட திரு தர்மரத்தினம் சிவராம் அவர்கள் மிகத் துணிச்சலானதொரு ஊடகவியலாளர். எவ்வகையான நெருக்கடிச் சூழ்நிலைகளிலும் எதற்கும் அஞ்சாது துணிச்சலாக செய்திகளையும் கருத்துக்களையும் முன்வைத்து வந்தவர். கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சர்வதேசம் நன்கறிந்த சிறந்த தமிழ் ஊடகவியலாளராகச் செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளி உலகிற்கு எடுத்துச் சொன்னவர். தனது ஊடகப் பணியினூடாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்த முனைந்து உழைத்தவர்;.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தன்னை நீண்ட காலமாகவே தெளிவாகவும் உறுதியாகவும் பிணைத்திருந்தவர் சிவராம். சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து இணைந்து செயற்பட்டவர். அன்றிலிருந்து தனது இறுதிக் கணம் வரையிலும் தமிழின விடுதலையை நெஞ்சார விரும்பி தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தவர்.

சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து தமிழரின் இனப் பிரச்சினைக்கான எத்தகைய தீர்வையும் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது என்ற வலுவான கருத்தை தனது அனுபவத்தின் வழியாக வலியுறுத்தி வந்தவர் சிவராம். அத்துடன் தமிழ்த் தேசியத்தை கூர்மைப்படுத்த வேண்டும், அதனைப் பலப்படுத்த வேண்டும் என்னும் உயரிய நோக்கோடு வாழ்ந்தவர்.

தமிழ்த் தேசியம் பலத்தோடு வளர்த்துச் செல்லப்பட வேண்டும் எனக்கூறி தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தலைமையை ஆதரித்தவர் டி. சிவராம்.

சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து தெளிவற்ற முறையில் கற்பிதங்களை மக்களிடம் உருவாக்கும் போக்கு தமிழ் ஊடகத்துறையின் தவறாகும் எனச் சுட்டிக்காட்டியவர். அதேவேளையில் சமாதானத்தை தமிழர்களுக்கு ஒரு பொறியாக மாற்ற முனையும் சந்தர்ப்பங்களை அம்பலப்படுத்த வேண்டும் – அதுவே தமிழ் ஊடகங்களின் இன்றைய பணி என்றும் சொல்லிவந்தவர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் தம்மை நவீன தகவல் தொழில்நுட்பத்திலும் தொடர்பாடலிலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிவராம் தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் வலியுறுத்தி வந்தார். தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் சிவராம் ஒரு நல்ல தோழமையாளனாக பத்திரிகைத்துறையில் பலருக்கும் முன்னோடியாளனாக இருந்து ஊடகத்துறையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

எப்போதும் பக்கச் சார்புகள் இல்லாமல் தனது விமர்சனங்களை முன்வைத்து வந்த நல்லதொரு பண்பாளர் சிவராம் அவர்கள். கொழும்பில் கொலை மிரட்டல்கள், குடியிருப்பதற்கான அச்சுறுத்தல்கள் எனத் தொல்லைகள் தொடர்ந்தபோதும் அவற்றைக் கண்டு பின்வாங்காமல் சிங்களப் பேரினவாதத்தை அம்பலப்படுத்தி வந்தவர்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர்

நிமலராஜனையோ, நடேசனையோ, தன்னையோ கொல்வதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டக் கருத்தினை மழுங்கடித்து விட முடியாது என்பதை கொலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று, தனக்கு வரக்கூடிய அபாயத்தை ஏற்கனவே உணர்ந்து கூறி வந்தவர். ஆனாலும், தனது கருத்துக்களையோ நிலைப்பாட்டினையோ தளர்வேதுமில்லாமலே இறுதிவரை உறுதியுடன் தொடர்ந்து வந்தார். தனது குடும்பம், தனது சுய பாதுகாப்பு என்பவற்றைக்கூட பெரிதெனக் கருதாமல் ஒரு நல்ல புகழ் வாய்ந்த தமிழ் ஊடகவியலாளராக உழைத்து வந்தவர் சிவராம்.

ஊடகவியலாளர் சிவராம் ஏற்கனவே பல தடவைகள் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையின் கொலை மிரட்டல்களை எதிர்நோக்கியுள்ளார். அவரது கொழும்பு இல்லமும் சோதனைக்குள்ளாகியது. இக்கொலையானது கொழும்பின் உயர் பாதுகாப்பு பகுதியுள் நடைபெற்றுள்ளது. எனவே, இக்கொலைக்கு சிறிலங்கா அரசும் அதன் படைகளுமே பொறுப்பாகின்றன.

சிவராமின் உறுதியையும் அவருடைய கருத்து நிலைப்பாட்டினையும் அவருடைய விரிந்த செயல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள் இன்று அவரைக் கடத்திக் கொன்றிருக்கின்றன.

உண்மையில் இலங்கையில் சிவராம் ஆற்றிய சேவை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது இன்று அவர் இல்ல விட்டாலும் அவருடைய பேனா முனை போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்

2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்…” என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

இதேவேளை வடக்கு,கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்றும் உங்கள் மாணவன்…

-சசிகரன் புண்ணியமூர்த்தி

Tags: , , ,

Leave a Reply