ஹாங்காங்கை சேர்ந்த ஒருவர் தனது உடல் முழுவதும் அமெரிக்க டாலர் நோட்டுக்களை மறைத்து வைத்து கடத்த முயன்றபோது சீனப்போலீஸாரால் பிடிபட்டார்.
ஹாங்காங்கை சேர்ந்த ஒருவர் சீன எல்லையை Shenzhen என்ற இடத்தில் காரில் கடக்க முயன்றார். அவரது லக்கேஜ்களை பரிசோதனை செய்த சீன எல்லைப்படை போலீஸார், அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டனர். அவர் போலீஸாரிடம் தான் மிக அவசர வேலையாக போய்க்கொண்டிருப்பதாகவும், சீக்கிரம் சோதனை செய்துவிட்டு தன்னை அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார். அதனால் போலீஸாரின் சந்தேகம் வலுத்தது.
பின்னர் அவரது உடையை கழட்டி சோதனை செய்து பார்த்ததில் தனது உடலின் பல பாகங்களில் அமெரிக்க டாலர் பணத்தை கட்டுக்கட்டாக டேப் வைத்து ஒட்டவைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்த மொத்த தொகை $580,000 ஆகும். சீனாவிற்கு நுழையும் ஒருவர் $5000 டாலருக்கு மேல் கொண்டு சென்றால் அதற்கு சரியான விளக்கம் தரவேண்டும். ஆனால் ஹாங்காங் நபர் எவ்வித விளக்கமும் கூறாததால் அவர் கைது செய்யபட்டார். அவர் வந்த காரும் கைப்பற்றப்பட்டது.
அமெரிக்க டாலர்களை சீனாவிற்கு கடத்துவது தற்போது அதிகமாக நடந்துவருகிறது. எனவே சீன அரசு எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
















