தாய்லாந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் யாப்பை மீறி செயற்பட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இன்று நிரூபிக்கப்பட்டதால் அவரை பதவி விலகுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் வாக்குமூலம் அளித்தார்.
தாய்லாந்தில் தனக்கு ஆதாயம் ஏற்படும் வகையில் யிங்லக் ஷினவத்ரா, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, 2011ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவரை பணியிடமாற்றம் செய்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கில், ஷினவத்ரா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டுள்ளது.
தாய்லாந்தில் பிரதமராக பதவி வகித்த தக்ஷின் ஷினவத்ரா, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு எதிராக 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சியினால் பதவி விலக நேர்ந்தது.
இதையடுத்து அவரது சகோதரியான யிங்லக் ஷினவத்ரா, பிரதமர் பதவியை ஏற்றார். தக்ஷின் ஷினவத்ராவின் நிழல் பிரதமர் என இவரை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் யிங்லக் ஷினவத்ரா, பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த ஆண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
















