குடித்துவிட்டு தினமும் கொடுமை படுத்திய கணவனை உருட்டுக்கட்டையாலயே போட்டுத் தாக்கியுள்ளார் மனைவி ஒருவர். வத்தலக்குண்டு அருகில் உள்ள சித்தரேவு கோட்டைபட்டியை சேர்ந்த ராமு மனைவி நாச்சம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ராமு ஒழுங்காக வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் தன் குழந்தையை அடித்த ராமுவை நாச்சம்மாள் தட்டிக்கேட்டார். இதனால் நாச்சம்மாளையும் தாக்க தொடங்கினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாச்சம்மாள் உருட்டுக்கட்டையால் தனது கணவர் என்றும் பாராமல் சரமாரியாக அடித்து உதைத்தார். படுகாயம் அடைந்த அவர் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ராமுவின் உறவினர் லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
















