சுவிற்சர்லாந்து சிவராம் நினைவு மன்றம் நடத்திய சிவராம் நினைவுக் கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் நகரில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் “”சிறிலங்காவில் தமிழ் ஊடகங்களும் ஊடகர்களும் எதிர்நோக்கும் சவால்கள் சர்வதேச பங்களிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர் வின்சென்ட் ஜெயன் தலைமை வகித்தார். மூத்த ஊடகவியலாளர் ஞா.குகநாதன் வரவேற்புரை நிகழ்த்த சண்.தவராஜா நன்றியுரை வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் ஆற்றிய உரையின் முழு வடிவம் கீழே தரப்படுகின்றது. அமரர் தராகி சிவராமின் நினைவுப் பேருரையை ஆற்றுவதற்காகத் தாங்கள் என்னை அழைத்தமையையிட்டு நான் பெருமைப்படுகிறேன். அதேநேரம், வருத்தமும் அடைகிறேன்.
வயதில் என்னை விட இளையவரான சிவராமின் நினைவுரையை ஆற்றும்படி என்னை நிர்ப்பந்தித்திருக்கும் இலங்கையின் காலச் சூழல் குறித்தும், குறிப்பாகத் தமிழ் ஊடகத்துறையின் களநிலை குறித்தும் நான் கவலையும் வருத்தமும் அடைகின்றேன்.
சிவராமைப் பலியெடுத்த சூழல் இன்றுவரையில் இலங்கையில் மாற்றமில்லாமல் தொடர்வது குறித்தும் சிவராமைக் கொலை செய்தவர்கள் மட்டுமன்றி ஏனைய பத்திரிகையாளர்களைக் கொலை செய்தவர்களும் ஊடக நிறுவனங்களைத் தாக்கியவர்களும் இன்னும் சுதந்திரமாக நடமாடுவதற்கு இலங்கையில் இடமளிக்கப்பட்டுள்ளமை குறித்தும் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் நாங்கள் இருப்பது வருத்தமளிக்கிறது.
அச்சுறுத்தலை எதிர்கொண்ட பத்திரிகையாளர்கள் பலர் இலங்கையை விட்டு உயிர்காக்க வெளியேறி வேறு நாடுகளுக்கு ஓடவேண்டியிருந்தது. அப்படி 50 பத்திரிகையாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறி இருந்தார்கள் என்று இரண்டு வருடங்களின் முன்னர் சுனந்த தேசப்பிரிய இதே மன்றத்தில் கூறியிருக்கிறார்.
இந்த எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டில் 80 ஆக அதிகரித்துவிட்டது என்று தெற்காசிய சுதந்திர ஊடகச்சங்கம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடக சுதந்திரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்சபை வரையில் விவாதப் பொருளாக மாறிவிட்டபோதும் நிலைமையில் மாற்றமோ முன்னேற்றமோ ஏற்படவில்லை என்பதைத்தான் இன்றும் தொடரும் தாக்குதல்கள் உணர்த்துகின்றன.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி வாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரு வாரங்களில் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் முதன்மை அச்சு இயந்திரம் முற்றாக எரித்து அழிக்கப் பட்டது. சரியாக ஒரு வருடம் கடந்து விட்ட நிலையிலும் அந்த அச்சு இயந்திரத்தை திருத்தி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர எம்மால் முடியாதுள்ளது. காப்புறுதி நிறுவனத்தினர் அதற்குரிய பணத்தை இன்னும் தருகிறார்கள் இல்லை.
முதலில் காவல்துறையினரின் விசாரணை அறிக்கை வேண்டும் என்றார்கள். உங்களுக்கே தெரியும் இத்தகைய தாக்குதல்களில் காவல்துறையினர் என்றாவது விசாரணைகளைப் பூர்த்தி செய்திருக்கிறார்களா என்பது. தமது விசாரணை இன்னும் பூர்த்தி அடையவில்லை என்றுதான் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பலத்த போராட்டத்தின் பின்னர் ஒருவாறு அந்தத் தடையைத் தாண்டிச் சென்றாலும் தரவேண்டிய காப்புறுதித் தொகையை முழுமையாகத் தராமல் இந்த விடயத்தைத் தொடர்ந்தும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் காப்புறுதி நிறுவனத்தினர்.
இதன் பின்னால் அரசின் அழுத்தம் இருக்கும் என்று நான் திடமாகச் சந்தேகப்படுகிறேன். நாங்கள் (உதயன்) மீண்டும் முழு வீச்சில் பிரதிகளை அச்சிடக்கூடாது என்பதே அவர்களது நோக்கம். எம்மை முடக்காமல் வடக்கில் தேசியக் கட்சிகள் காலூன்ற முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
எனவேதான் எமது அச்சிடும் வல்லமையை முடக்கும் நோக்கத்துடன் மிகத் திறம்படத் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அச்சு இயந்திரத்தின் முக்கிய இயக்கு கருவி எங்கிருக்கிறது, அச்சு இயந்திரத்துக்கான மின் விநியோக மார்க்கம் எங்கிருக்கிறது போன்ற விவரங்கள் தாக்குதலாளிகளுக்குத் துல்லியமாகத் தெரிவிக்கப்பட்டே தாக்குதல் நடத்தப்பட்டது.
அதற்குப் பத்து நாள்களுக்கு முன்னர்தான் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் தாக்கி நொருக்கப்பட்டது. பத்திரிகைகளை விநியோகிக்க ஊழியர்கள் வரும்வரை காத்திருந்து அந்தத் தாக்குதலை நடத்தியிருந்தார்கள். மூன்று ஊழியர்கள் அந்தத் தாக்குதலில் காயமடைந்திருந்தார்கள். அதன் பின்னர் நடந்த விசித்திரமான சம்பவம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். வடக்கு மாகாண சபைத் தேர்தல் அன்று போலி உதயன் பத்திரிகை ஒன்றை அச்சிட்டு வெளியிட்டார்கள்.
தேர்தலைக் கண்காணிக்க வந்திருந்த இந்தியத் தேர்தல் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் சேன், இந்தியாவிலே கூட இப்படித் தேர்தல் மோசடி இடம்பெற்றதில்லை, இவர்கள் இந்தியாவையும் மிஞ்சி விட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.
அந்தப் போலிப் பத்திரிகையை இராணுவத்தினர்தான் வீடுவீடாகக் கொண்டு சென்று விநியோகித்தார்கள். பொலிஸாரிடம் முறையிட்டும் அதற்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
ஐ.நா. தீர்மானத்தின் பின்னர் மட்டுமல்ல அதற்கு முன்னரும் 2013 ஜனவரி முதல் யாழ்ப்பாணத்தில் ஊடகங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஊடகவியலாளர்கள் மட்டும் இலக்கல்ல. ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் எல்லோருமே இலக்காக்கப்படுகிறார்கள். இதனால் ஊடக நிறுவனங்களில் பணியாற்ற இளைஞர்கள் பின்னடிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமையை அதிகம் அவதானிக்கலாம். அங்கு தொழில் வாய்ப்புக்கள் ஏதுமின்றி பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கின்றனர் என்ற போதும் அவர்களை ஊடக நிறுவனங்களில் வேலைக்கு சேர்க்கப் பெற்றோர் பயப்படுகிறார்கள்.
இதையும் தாண்டி ஒரு சில இளைஞர்கள் முன்வந்தால் அவர்களது குடும்பத்தினர் அதனை விரும்புவதில்லை. தமிழ்ப் பரப்பில் இது மிக அதிகமாக இருக்கிறது. ஓர் இளைஞன் ஊடகத்தில் இணைந்து கொண்டால் அவனை எப்படி அங்கிருந்து பாதுகாப்பாக சேதங்கள் ஏதுமின்றி வெளியேற்றுவது என்றே பெற்றோரும் குடும்பத்தினரும் நினைக்கிறார்கள்.
இளம் பெண்கள் திருமணம் செய்தால் அதன் பின்னர் ஊடகங்களில் பணியாற்றுவதைத் தொடர்வது என்பதை அவர்களால் நினைத்தும் பார்க்க முடிவதில்லை. இளம் ஆண்களாக இருந்தால் அவர்களது வாழ்க்கைத் துணைகள் இந்தத் தொழிலில் தொடர்வதை அனுமதிக்க விரும்புவதில்லை. ஊடகப் பணியில் இருந்து ஒதுங்கி வேறு வேலைகளுக்குச் செல்லுமாறு வாழ்க்கைத் துணைகளால் இளைஞர்கள் தொடர்ச்சியான நெருக்குவாரங்களுக்கு உள்ளாகிறார்கள். இந்தப் பணியில் இன்றும் தொடர்ந்து இருக்கும் உயிர் ஆபத்துத்தான் இதற்கான காரணம்.
இளைஞர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. எல்லோருடைய நிலையும் கிட்டத்தட்ட இதுதான். அரச வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்கூட எமக்கேன் வம்பு என்ற ரீதியில் ஒதுங்கிச் செல்லும் நிலைமைதான் இருக்கிறது.
அந்தளவுக்கு ஊடகத்துறையை ஏதோ பயங்கரவாத அமைப்புக்கள் போன்று இலங்கை அரசும் அதன் சட்டம் ஒழுங்குக் காவலர்களும் உருவகப்படுத்துகிறார்கள். உதயன் இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பத்திரிகையான டெய்லி நியூஸ் அதனது மூன்றாம் பக்கத்தில் உதயனுக்கு எதிரான செய்திகளைத் தினசரி பிரசுரித்தது. வடக்கில் பணியில் இருந்த அத்தனை இராணுவ ஜெனரல்களும் உதயன் பத்திரிகைக்கு எதிராக டெய்லி நியூஸில் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். முன்னாள் இராணுவ ஜெனரலும் தற்போதைய ஆளுநருமான ஜி.ஏ.சந்திரசிறியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தார்.
உதயன் வெளியிடும் ஒவ்வொரு செய்தியும் தவறானவை இராணுவத்துக்கும் அரசுக்கும் எதிரானவை, இன நல்லிணக் கத்துக்கு விரோதமானவை, பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பவை, பயங்கரவாதத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கங்கொண்டவை என்று இவர்கள் ஒவ்வொருவரும் விசத்தைக் கக்கினார்கள்.
உதயனுக்கு எதிராக இப்படியான கருத்துருவாக்கம் ஒன்றைச் செய்து அதன் மூலம் சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு காடையர்களை ஒழுங்கமைத்து உதயன் மீதும் அதன் ஊழியர்கள் மீதும் தாக்குதல்களை நடத்துவதற்கான சதியின் ஓர் அங்கமோ இது என்று நாம் அச்சப்படும் அளவிற்கு நிலைமை இருந்தது.
பயங்கரவாத முத்திரை குத்தப்படும் இந்த நடைமுறையின் பிரதான இலக்காக இணையத் தளங்கள் மாறியிருக்கின்றன. கடந்த சில வருடங்களில் புலத்திலும் தாயகத்திலும் புகழ்பெற்றிருந்த பல இணையத் தமிழ்ச் செய்தித்தளங்கள் கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டிலுமாகத் தடை செய்யப்பட்டுவிட்டன.
இவை பயங்கரவாத அமைப்புக்களின் முகவர் நிலையங்கள் என்பது போன்று அரச சார்பு ஊடகங்கள் கருத்துக்களைப் பரப்புகின்றன. இலங்கை அரசை விமர்சிப்பதும், படையினர் செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதும் பயங்கரவாதமா?
அரசை விமர்சித்த சிங்கள இணையத் தளங்களுக்கும் கடந்த காலங்களில் போர் முடிந்த பின்னரான காலத்தில் இதுதான் நடந்தது. லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் பத்திரிகையாளர்களை அரசு நடத்திய விதத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அரசை விமர்சித்ததைத் தவிர அந்தப் பத்திரிகையாளர்கள் செய்த தவறு ஒன்றும் இல்லை.
நிலைமைகள் இப்படி இருக்கும் போது எவ்வாறு ஊடக நிறுவனங்களுக்கு ஆள்களைப் பணிக்கு எடுக்க முடியும்? ஊடகத்துறையில் படித்துப் பட்டம் பெறும் மாணவர்களே ஊடகங்களில் பணியாற்றப் பின்னடிக்கும் நிலைமைதான் காணப்படுகிறது. அவர்கள் தாம் படித்ததற்கும் தமது அறிவுக்கும் தொடர்பில்லாத அரச வேலைகளையே நாடிப்போகிறார்கள்.
சவால்கள் இவை மட்டுமல்ல
இன்று ஊடகத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் இவை மட்டுமல்ல. ஊடகங்களை குறிப்பாக அரசை விமர்சிக்கும் ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வருவதற்கு அரசு சாம, தான, தண்ட, பேத முறைகள் அனைத்தையும் கையாள்கிறது.
இப்போது வடக்குக்கு வெளியே உதயன் பத்திரிகையை எடுத்துச் செல்லும் திட்டம் அப்படியே தேங்கி நிற்கிறது. நாங்கள் எதிர்பார்த்த அச்சு இயந்திரம் எமக்குக் கிடைக்கவில்லை என்பதும் அதற்கு மற்றுமொரு காரணம். எனினும் எனக்குச் சொல்லப்பட்டிருக்கும் தகவல் மறைமுகமான எச்சரிக்கை என்றே நான் நினைக்கிறேன்.
நிறுவனத்தை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டே எந்தவொரு முடிவையும் நான் எடுக்க வேண்டியிருக்கிறது.
இதேவேளை, கொழும்பில் இருந்து வெளிவரும் சுடர்ஒளி பத்திரிகையை என்னிடம் இருந்து வாங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புலத்தில் உள்ள அரசுக்குச் சார்பான தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் மூலம்தான் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எத்தகைய நிலையிலும் பத்திரிகையைக் கைமாற்றத் தயாரில்லை என்ற செய்தியை அவருக்குக் கொடுத்திருக்கிறோம். நிலைமை தலைக்கு மேலே சென்றால் பத்திரிகையை மூடிவிடுவோமே தவிர, தமிழ்த் தேசியத்துக்கு எதிரான எந்தச் சக்திகளுக்கும் அது கொடுக்கப்படமாட்டாது என்ற செய்தி அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அந்த முயற்சியை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை.
போர் முடிந்த பின்னர் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு வழிவகையாக நீதிமன்றங்களிலே வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. உதயன் பத்திரிகைக்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
குற்றவாளிகளைத் தண்டிக்காமல் தப்ப விடும் போக்கு
ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறைகளைத் தடுக்க வேண்டும் என்றால், நிறுத்த வேண்டும் என்றால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் இலங்கையில் அது நடப்பதே இல்லை. ஏனெனில் ஊடகங்கள் மீதான அடக்கு முறைக்கு காரணமானவர்களாக அரசசார்புக் குழுவினர் அல்லது படையினரே இருக்கின்றனர் என்பதுதான்.
அதிலும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களில் இராணுவம் உள்ளிட்ட படையினரின் பங்களிப்பு அதிகமாக இருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குகிறார்கள். இப்படிப்பட்ட தருணங்களில் அவர்கள் இனரீதியாகச் செயற்படுகிறார்களே தவிர நீதியின்பாற்பட்டு அல்ல.
ஓர் உதாரணத்தை இங்கு முன்வைக்கலாம். 2012 நவம்பர் 26 ஆம் நாள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிப் பகுதியில் வைத்து இராணுவ அதிகாரி ஒருவர் உதயன் ஆசிரியரைத் தாக்குகிறார். அந்த இடத்தில் யாழ். பொலிஸ் நிலையத் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிகேராவும் இருந்தார். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்ப் பத்திரிகையாளர்களைத் தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவதன் அர்த்தம் அவ்வாறான தாக்குதல்களை ஊக்குவிப்பது தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? இத்தகைய நிலைமையினால் தான் ஊடக சுதந்திரம் குறித்த 179 நாடுகள் கொண்ட பட்டியலில் இலங்கையை 162 ஆவது இடத்தில் தரப்படுத்தியுள்ளது எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு. கடந்த ஆண்டு இந்த அமைப்பே, ஊடக சுதந்திரத்துக்காகத் தொடர்ந்து போராடியமைக்கான சர்வதேச விருதையும் உதயன் பத்திரிகைக்கு வழங்கியிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் இலங்கையில் ஊடக சுதந்திரம் மேம்படும் என்ற நம்பிக்கை எதுவும் எனக்கில்லை.
தமிழர்களின் போராட்டமும் ஊடக சுதந்திரமும்
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இருக்கும் வரையில் இலங்கையில் ஊடக சுதந்திரத்தை அனுமதிக்க இலங்கை அரசுகள் தயாராகும் என்று நான் நம்பவில்லை. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் இலங்கையில் ஊடகங்கள் நசுக்கப்பட ஆரம்பித்த காலத்துக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு உண்டு என்று நான் நினைக்கின்றேன். இரண்டுமே 1981 ஆம் ஆண்டளவில் தான் தீவிரம்பெற ஆரம்பித்தன. எனவே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் நிலைமை மேம்படுவதற்கான சாத்தியங்கள் ஏற்படும் என்று நான் கருதவில்லை.
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நடந்த காலப்பகுதி முழுவதும் இலங்கை அரசுகள் ஊடகங்களை நசுக்குவதில் ஊடகவியலாளர்களை அடிபணிய வைப்பதில் முழுக் குறியோடு செயற்பட்டிருக்கின்றன. எல்லாப் போர்களிலும் முதலில் சாகடிக்கப்படுவது உண்மை என்பதைப்போலவே உண்மையைச் சொல்லும் ஊடகவியலாளர்களைச் சாகடிப்பதன் மூலம் உண்மையைச் சாகடிக்க முயன்றிருக்கின்றன இலங்கை அரசாங்கங்கள். குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் இந்தத் தாக்குதல்களின் முதற் குறியாகவும் முழுக் குறியாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.
அரசியலுக்கும் ஊடக அடக்குமுறைக்கும் இடையிலான இந்தத் தொடர்பு மிக முக்கியமான விடயத்தைச் சொல்கிறது. அதாவது இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படாத வரையில் ஊடக சுதந்திரம் அங்கு மேம்படுவதற்கோ மனித உரிமைகள் மேம்படுவதற்கோ சாத்தியங்கள் ஏதுமில்லை.
ஏனெனில் ஊடகங்களை அடக்கி ஒடுக்காமல் இலங்கை அரசுகளால் தமிழ் மக்களை வெற்றிகரமாக அடக்கி ஒடுக்க முடியாது. ஊடகங்கள் அனைத்திடம் இருந்தும் மறைக்கப்பட்ட வன்னியின் இறுதிப் போர் எப்படி நடத்தப்பட்டது? எவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன? எவ்வளவு தூரத்துக்கு மனித உரிமைகள் மீறப்பட்டன? மனித குலத்துக்கே எதிரான குற்றங்கள் எவ்வளவு புரியப்பட்டன என்பதெல்லாம் இப்போது சர்வதேச அரங்கில் வெளிவந்து கொண்டிருக் கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உண்மையான விசாரணை அறிக்கை வெளிவரும்போது இன்னும் கூடுதலான உண்மைகள் வெளிவரும்.
சுதந்திரமான ஊடகங்கள் போர் முனையில் அனுமதிக்கப்பட் டிருந்தால் இத்தனை கொடிய போர் ஒன்றை இவ்வளவு துணிச்சலாக மேற்கொண்டிருக்க முடியுமா? இன்று மனித உரிமைகள் குறித்து பெருமெடுப்பில் குரல் கொடுக்கும் நாடுகள் அன்று இலங்கைக்கு ஆதரவாக இந்தப் போரில் பங்காளிகளாக வெட்கம் கெட்ட தனமாக இருந்திருக்க முடியுமா?
சர்வதேசப் பங்களிப்பு
அதேசமயத்தில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் இலங்கையில் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் இருப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் நான் கருதுகின்றேன். தொழில் நுட்பரீதியிலும் அறிவுரீதியிலும் அங்குள்ள பத்திரிகையாளர்களை மேம்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. அதற்கு புலம்பெயர் சமூகம் உதவவேண்டும். தொழில்ரீதியிலான பட்டறிவை மேற்குலக நாடுகளில் பெற்றுக்கொள்வதற்கு சிவராம் நினைவு மன்றம் போன்ற அமைப்புகள் உதவவேண்டும்.
அதே போன்று இங்கு பத்திரிகைத் துறையில் படித்துப் பட்டம் பெற்ற தமிழ் இளையவர்கள் இலங்கைக்கு வந்து பணியாற்றுவதற்கும் முன்வரவேண்டும். அது இரு தரப்பினரையும் வளப்படுத்துவதுடன் அங்குள்ள உண்மை நிலவரத்தைத் தமிழ் இளையோர்கள் அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும். சர்வதேச பங்களிப்பு என்ற விடயத்தில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்பையும் சேர்த்தேதான் நான் நோக்குகிறேன்.
















