
அரசாங்கம் யுத்த வெற்றியைத் தொடர்ச்சியாக, பெரும் எடுப்பில் கொண்டாடி வருகின்ற அதேநேரம் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்குகிழக்குப் பிரதேச மக்கள் அமைதி இழந்தவர்களாக, எதிர்காலம் பற்றிய அச்சம் நிறைந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த யுத்தத்தி;ல் இறந்தவர்களை நினைவுகூரக் கூடாது என்று உத்தரவிட்டு வடக்கி;ல் கடும் இராணுவ கண்காணிப்பை மேற்கொண்டிருந்த அரசாங்கம் தெற்கி;ல் மாத்தறையில் யுத்த வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடியிருக்கின்றது.
இந்த யுத்த வெற்றிவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ‘நாங்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடவில்லை. சமாதானத்தின் வெற்றியையே கொண்டாடுகின்றோம்’ என்று அழுத்தி உரைத்திருக்கின்றார். முப்பது வருடங்களாக நீடித்திருந்த யுத்தத்தில் அடைந்துள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்தும் கொண்டாடுவோம் என்றும் அவர் உறுதியாகக் கூறியிருக்கின்றார். ‘யார் எதிர்த்தாலும், எவரெவர் ஒதுங்கிருந்தாலும் இந்த வெற்றியைத் தொடர்ந்து நாங்கள் கொண்டாடுவோம்’ என்று அவர் சூளுரைத்திருக்கின்றார்.
சிறுபான்மையின மக்களாகிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவே விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அரசியல் உரிமைகளை வழங்க மறுத்து, உரிமைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்காக அரசாங்கம் இராணுவத்தை முழு அளவில் பயன்படுத்திய காரணத்தினாலேயே ஒரு யுத்தம் மூண்டது. இதனை யுத்தம் என்றும் யுத்த மோதல்கள் என்றும் பலரும் குறிப்பிட்டாலும்கூட, மோசமான பகைமையுள்ள இரண்டு எதிரி நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற யுத்தமாக இதனைக் கொள்ள முடியாது. அத்தகைய ஒரு யுத்தத்தில் அடைகின்ற வெற்றியைக் கொண்டாடினால், அதில் ஓர் அர்த்தம் இருக்கும். உண்மையான வெற்றி என்று அதனை, காலம் காலமாகக் கொண்டாடலாம்.
நாட்டில் சமாதானம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்ற தேசிய சமாதானப் பேரவை, ‘புத்திகூர்மையுள்ள நாடு, சிவில் யுத்தத்தின் பின்னர் ஒருபோதும் யுத்த வெற்றியைக் கொண்டாடுவதில்லை’ என்று மாத்தறையில் நடைபெற்ற யுத்த வெற்றிவிழாவையொட்டி, இடித்துரைத்திருக்கின்றது.
‘ஆனால், இலங்கையில் அரச தலைமைத்துவம் எல்ரீரீயினரைத் தோற்கடித்ததை, பெருமிதம் மிக்க வெற்றியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இது துரதிஸ்டவசமானது. இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி, இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதே இப்போதைய தேவையாகும்’ என்று அந்த அமைப்பு வலியுறுத்தியிருக்கின்றது.
ஐந்தாவது ஆண்டாகக் கொண்டாடப்படுகின்ற இந்த யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தை வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் புறக்கணித்திருக்கின்றனர். ஜனநாயகவாதிகளான பலரும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இந்த வெற்றிவிழா கொண்டாட்ட நடவடிக்கையை விமர்சித்திருக்கின்றார்கள். இதன் காரணமாகத்தான் மாத்தறை யுத்த வெற்றிவிழாவில் யார் எதிர்த்தாலும், யார் புறக்கணித்தாலும் இந்த வெற்றிவிழர தொடர்ந்து கொண்டாடப்படும் என்று ஜனாதிபதி இறுக்கி உரைத்திருக்கின்றார் போலிருக்கின்றது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் என்பது ஒரு சிவில் யுத்தமாக இருந்த போதிலும், அதனைக் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த யுத்தத்தில் இராணுவம் அடைந்த வெற்றியையும் குறைவாகக் கூற முடியாது. ஏனெனில் ஆயுதமேந்திப் போராடிய ஒரு சாதாரண ஆயுதக் குழுவாக விடுதலைப் புலிகளை மதிப்பிட முடியாது, அவர்களிடம் முப்படைகளும் இருந்தன. குறிப்பாக கடற்படைப் பலத்துடன், விமானப்படைப் பலத்தையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். இதனால் ஓர் அரசாங்கத்திற்கு ஈடான வகையில் இராணுவ பலம் பொருந்தியிருந்தார்கள். அவர்களை யத்தத்தில் வெற்றிகொள்வதென்பது சாதாரண காரியமல்ல. ஆனால் அந்த வெற்றியை இந்த அரசாங்கம் அடைந்திருக்கின்றது. அதனால், அது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மதிப்பையும் பெற்றிருக்கின்றது.
இருந்தபோதிலும், இந்த யுத்தம் என்பது அந்நியருடன் நடத்தப்பட்ட யுத்தமல்ல. தனது நாட்டிற்குள், தனது பிரஜைகளில் ஒரு பகுதியினருக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு யுத்தமாகும். இவ்வாறு நாட்டின் குடிமக்கள் ஒரு தொகுதியினர் முப்படைகளையும் கொண்ட இராணுவ பலமுள்ளவர்களாக உருவெடுப்பதற்கான அரசியல் சூழலை உருவாக்கியதற்காக பெரும்பான்மை பலம் கொண்ட பேரினவாத அரசியல் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும். தேசத்தின் அபிமானிகள் என்ற வகையில் இத்தகைய நிலைமைக்காக அவர்கள் வருத்தமடைந்திருக்க வேண்டும். ஆனால் எமது நாட்டில் அது நடைபெறவில்லை.
பேரினவாத அரசியல்வாதிகளின் கைமீறிய நிலைமைகளினால் யுத்தம் மூண்டுவிட்டது. அந்த யுத்தத்தில் அரசாங்கம் வெற்றியும் அடைந்துவிட்டது என்றாலும்கூட, அந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரினதும் வெற்றியாக, உண்மையான சமாதானத்தின் வெற்றியாக இந்த அரச தலைவர்கள் மாற்றியிருக்க வேண்டும். அவர்கள் அதனைச் செய்யவில்லை. கடந்த ஐந்து வருட காலத்தில் அவ்வாறு செய்வதற்கு அவர்கள் தவறிவிட்டார்கள். தவறிவிட்டார்கள் என்பதிலும் பார்க்க அவர்கள் அவ்வாறு செய்வதற்கு முனையவில்i. விரும்பவுமில்லை.
உண்மையான வெற்றிதானா?
விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகக் காட்டியுள்ள அரசாங்கம் அவர்களுக்கு எதிரான யுத்தத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றிருப்பதாகத் தொடர்ந்து பறைசாற்றி வருகின்றது. இது, உண்மையான வெற்றிதானா என்ற சந்தேகக் கேள்வி எழக்கூடிய வகையிலேயே கடந்த ஐந்து வருடகால நிலைமைகள் காணப்படுகின்றன.
நாட்டின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலேயே யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்த வெற்றியின் ஐந்தாவது ஆண்டு கொண்டாட்டங்கள் இம்முறை தெற்கில், யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் இருந்து தொலை தூரத்தில் நடைபெற்றன. அதேநேரம் ‘வடக்கி;லும் கிழக்கிலும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களைப் பொது இடங்களில் நினைவுகூரக் கூடாது. அவ்வாறு நினைவுகூர்வது என்பது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபகாரனை நினைவுகூர்வதாகவே இருக்கும். அவரை நினைவுகூர்ந்து நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்’ என்று அரசாங்கம் கூறியிருந்தது.
வடக்கில் இறந்தவர்களை நினைவு கூர்வதென்பது பிரபாகரனை நினைவுகூர்வதே ஆகும் என்று மாத்தறையில் நடைபெற்ற யுத்த வெற்றிவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கோடிகாட்டியிருக்கின்றார்.
தெற்கில் யுத்தவெற்றியைப் பெருமெடுப்பில் அரசாங்கம் கொண்டாடிய அன்றைய தினம், அதேநேரம், வடக்கில் நிராயுதபாணிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரையும், படையினர் சீருடையிலும், சிவிலுடையிலும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தார்கள். ஆயுதங்கள் எதுவுமில்லாத அவர்கள் தங்களுடைய கட்சி அலுவலகங்களுக்குள் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, படையினர் அந்த அலுவலகங்களை முற்றுகையிட்டு, காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மே மாதம் 18 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததனால், இந்தப் படைவீரர்கள் 17 ஆம் திகதி நள்ளிரவே அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து அங்குள்ள சில பொதுஇடங்களில் நிலைகொண்டிருந்தார்கள்.
கட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டது மட்டுமல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காகப் பகிரங்கமாகவே அவர்களின் பின்னால் படையினர் சிவிலுடையில் கூட்டமாகத் திரிந்தார்கள். மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், போன்ற பலரும் இவ்வாறு பின்தொடரப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை பொது இடங்களில் நினைவுகூரக் கூடாது என்று அரசாங்கம் கண்டிப்பாக அறிவித்திருந்த காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தராகிய துவாரகேஸ்வரன், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்காகக் கீரிமலையில் பிதுர்க்கடன் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். சமயாசாரத்துக்கமைவாக இந்த நிகழ்வு நடைபெறவிருந்தது.
இதையும்கூட படையினர் நடக்கவிடவில்லை. கீரிமலைக்குச் செல்லும் பிரதான வீதிகளில் கீரிமலையில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் ஆயுதமேந்திய இராணுவத்தினரும் பொலிசாரும் வீதித் தடைகளைப் போட்டு கீரிமலைக்கு எவரும் செல்ல முடியாதவாறு பார்த்துக் கொண்டார்கள்.
அண்மையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்கூட, அவர்களுக்கான ஆண்டுத் திதி, 31 ஆம் நாள் திதி மற்றும் பிதிர்க்கடன்களைச் செய்வதற்காக கீரிமலைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களை இந்த வீதியால் செல்ல முடியாது, அளவெட்டி வீதியில் செல், அந்த வீதிவழியாகச் செல் இந்தப்பாதை வழியாகச்செல் என்று வீதித்தடையில் இருந்த படையினர் அலைக்கழித்திருக்கின்றார்கள். கீரிமலைக்குத்தான் போக முடியவில்லை வில்லூன்றிக்காவது சென்று கடன்களைச் செய்வோம் என்று அங்கு சென்றவர்களையும், அங்கிருந்த படையினர் இன்று செய்ய முடியாது நாளை வந்து செய் என்று திருப்பியனுப்பி வைத்திருக்கின்றார்கள். இறந்தவர்களுக்கு உரிய நாட்களில் கடன்களைச் செய்ய வேண்டும் என்ற சாதாரண சமய முறைகளை கடைப்பிடிப்பதற்குக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை ஆலயங்களில்கூட நினைவுகூரக் கூடாது, அவ்வாறு செய்தால், பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்ததாகக் கூறி, அவர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பாயும் என்று பொலிஸ்துறை பேச்சாளர் அஜித் ரோஹண அறிவித்திருந்தார். இதனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கைதடியில் உள்ள மாகாண சபை வளாகத்தில் செய்ய முற்பட்ட சிவாஜிலிங்கத்தைப் பிடித்துத் தள்ளிய ஒரு பொலிஸ் அதிகாரி, அவர் ஏற்றியிருந்த சுடரைத் தள்ளிவிழுத்தி காலால் உதைத்து உழக்கியிருக்கின்றார். மோசமான ஒரு யுத்தத்தி;ன்போது கொல்லப்பட்ட மனித ஆத்மாக்களுக்குச் செய்யப்பட்ட ஒரு கைங்கரியத்தை ஒரு பொலிஸ் அதிகாரியின் மூலமாக இந்த அரசாங்கம் இப்படித்தான் கையாண்டிருக்கின்றது. இறைமையுள்ள ஓர் அரசாங்கத்தின் கீழ் இத்தகைய நடவடிக்கை நடைபெற்றிருக்கமாட்டாது. ஆனால், இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இத்தகைய கேவலமான செயல் நடைபெற்றி;ருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை நிறுவனங்கள் பல சுற்றி வளைக்கப்பட்டு, படையினரால் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள செய்தியாளர்கள் பலரும் அன்றைய தினம் சிவிலுடை படையினரால் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடரப்பட்டு நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டிருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தின் முக்கிய இந்து ஆலயமாகிய நல்லூர் கந்தசுவாமி கோவிலில் ஷேட் இல்லாமல் இராணுவ சீருடை காற்சட்டை அணிந்த இராணுவத்தினர், அர்ச்சனை செய்யும் பாணியில் பூஜைத்தட்டுக்களை ஏந்திய வண்ணம் உள்ளே சென்று நிலைமைகளைக் கண்காணித்திருக்கின்றார்கள். இவர்கள் உண்மையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றதா என்பதைப் பார்க்கச் சென்றார்களா அல்லது அவர்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்காக மோட்சார்ச்சனை செய்யச் சென்றார்களா என்பது தெரியவில்லை. எது எப்படியிருந்தபோதிலும், புனிதம் நிறைந்த நல்லூர் ஆலயத்திற்குள் இவ்வாறு சீருடையுடன் இறந்தவர்களை நினைவுகூர்ந்து பூஜைகள் செய்யக்கூடாது என்ற கபட எண்ணத்துடன் படையி;னர் சென்றிருக்கக் கூடாது. உண்மையான இராணுவ வீரர்கள் இவ்வாறு செயற்பட்டிருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகின்றது.
பல்வேறு அச்சுறுத்தல்கள், அடக்குமறை செயற்பாடுகள் இருந்த போதிலும் நெருக்குதல்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வவுனியா, மன்னார் போன்ற பல இடங்களிலும் நாடாளுமன்ற உறுப்பி;னர்கள், மாகாணசபை உறுப்பி;னர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்குத் தீபங்கள் எற்றி அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுடைய ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திருக்கின்றார்கள். ஒரு போராட்டமாகவே இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.
யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் யுத்தத்தி;னால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது. சமயாசாரப்படி, பிதுர்க்கடன்களைச் செய்யக் கூடாது என்று கண்காணிக்கவும், அத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கம் தனது படைவீரர்களை முழு அளவில் பயன்படுத்தியிருந்தது என்றால், இந்த நாட்டில் இன்னும் யுத்தம் முடியவில்லை என்றே கொள்ளவேண்டியிருக்கின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்துவிட்டது என்றாலும், நிராயுதபாணிகளான போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிழல் யுத்தம் ஒன்றில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கின்றது என்றே அர்த்தமாகின்றது.
அரசாங்கம் கூறுவது போன்று உண்மையிலேயே இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு யுத்தத்தில் அரசு வெற்றிபெற்றிருக்குமேயானால், இந்த யுத்தம் காரணமாகத் தீர்க்கப்படாமல் போயிருந்ததாகச் சொல்லப்படுகின்ற இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய முயற்சிகளில் அரசு இதயசுத்தியுடன் ஈடுபடவில்லை என்பது கடந்த ஐந்து வருடகால அனுபவமாக இருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்து மக்களின் வாழ்க்கையில் உண்மையான மறுமலர்ச்சியை அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனை அது செய்யவில்லை. மாறாக நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருப்பதையே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
‘தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ முடியுமா?’
யுத்தம் முடிவடைந்ததையடுத்து நாட்டில் துப்பாக்கி வேட்டுச் சந்தங்கள் கேட்பதில்லை. மோதல்களின்போது இரத்தம் ஆறாக ஒடிய நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அச்சமும், பீதியும் சூழ்ந்த ஓர் அமைதியான நிலைமையே இப்போது காணப்படுகின்றது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. இப்போதுள்ள நி;லைமைபற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விபரித்திருக்கின்றார்.
‘கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்திருந்தது. இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கடந்த ஐந்தாண்டுகளாக அது அத்தகைய வெற்றிவிழாவைக் கொண்டாடி வருகின்றது. நாட்டின் தென்பகுதியில் ஆடல், பாடல், கொண்டாட்டங்கள் என்று வெற்றிவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெறும்பொழுது வடக்கு-கிழக்கு மக்கள் அழுது கண்ணீர்சிந்தி துக்கம் அனுஷ்டிக்கும் நிலைமைதான் தொடர்கின்றது. ஏனெனில், யுதத்ததில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். போராளிகளுக்கு அப்பால் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டிருந்தார்கள். ஆகவே ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் ஒரு கண்ணீர்க்கடலில்தான் மிதந்திருந்தது. பின்னர், அதனைப் படிப்படியாக மறக்கலாம் என்று சொன்னாலும்கூட, இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு மறுதலையாகவே இருந்து வருகின்றது. பயங்கரவாதத்தைத் தோற்கடித்துவிட்டோம் என்ற பெயரில் அவர்கள் களியாட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கின்றனர். அதே நேரம் இறந்துபோன தமது மக்களை நினைவு கூர்வதற்கு ஒரு தீபம் ஏற்றமுடியாத சூழலில்தான் தமிழ் மக்கள் இருக்கின்றனர். வீட்டில் ஒரு தீபம் ஏற்றுவதற்குக்கூட அவர்கள் அஞ்சி ஒடுங்குகின்ற ஒரு நிலை தோன்றியுள்ளது’ என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.
அது மட்டுமல்ல. யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இருந்து இன்னும் இராணுவம் அகற்றப்படவில்லை. அதனால் அங்கு சுமுக வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்யிருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
‘இப்பொழுது வடக்கு-கிழக்கு மாகாணத்தையும் குறிப்பாக வடக்கு மாகாணத்தையும் அவதானித்தால் மிகப்பயங்கரமான ஒரு இராணுவ ஆக்கிரமிப்புக்குள் உட்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். ஏறத்தாழ இரண்டு இலட்சம் இராணுவத்தினரில் வடக்கில் மட்டும் ஒன்று முதல் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் மிகவும் பலமாக நிலைகொண்டுள்ளனர். கோட்டை கொத்தளங்கள் முழுவதிலும் புதிய இராணுவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இராணுத்திற்கான குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகவே தமிழ் மக்களின் பிரதேசம் மிகமோசமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் அது கொள்ளையிடப்படுகின்ற வகையில் இராணுவத்தினர் விவசாயம் செயவதையும் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுவதையும்ளூ கடைகளை நடத்துவதையும்ளூ சிகை அலங்கார நிலையம் நடத்துவதையும் அவதானிக்க முடியும். எமது மக்கள் இன்னமும் சொந்த இடத்திற்குச் செல்ல முடியாமல் துன்பத்துக்குள்ளும் பட்டினிக்குள்ளும் பஞ்சத்திற்குள்ளும் இருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. யுத்தம் முடிவடைந்து ஐந்துவருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றபோதிலு
ம், முன்னர் எப்பொழுதையும்விட மிகவும் மோசமான இராணுவ அடக்குமுறை கோலோச்சுகின்றது. கடந்த ஐந்து வருடங்களில் நிலைமைகளில் எதுவித முன்னேற்றமுமில்லாமல் தமிழ் மக்கள் மிக மோசமான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்’
‘அது மட்டுமல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவுற்றுள்ளது. பேச்சுவார்த்தைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்வதில் அரசு முனைப்புக்காட்டாமல் இருக்கின்றது. சிங்கள பௌத்த தீவிரவாதம் மிகப்பெரிய அளவில் கொடிகட்டிப் பறக்கின்றது. கோயில்கள் உடைக்கப்படுகின்றனளூ தேவாலயங்கள் உடைக்கப்படுகின்றனளூ மசூதிகள் உடைக்கப்படுகின்றன. இநநாட்டில் ஒரேமொழி, ஒரேஇனம் என்ற நிலையைத் தோற்றுவிப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது’ என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கவலை பலருக்கும் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.
















