வளலாயில் காணிகளை பார்வையிடச் சென்ற மக்களை திருப்பி அனுப்பிய இராணுவத்தினர்

gobi-lk-armyயாழ். அச்­சு­வேலி, வளலாய் மேற்கு இரா­ணு­வக்­கட்­டுப்­பாட்டு பகு­தி­யி­லுள்ள தமது குடி­யி­ருப்புக் காணிகள் மற்றும் பயிர்ச்­செய்கை நிலங்­களை 23 வருடங்­களின் பின்னர் பார்­வை­யி­டு­வ­தற்­காக நேற்­றுக்­காலை ஆர்­வத்­தோடு சென்ற மக்­களை, இரா­ணு­வத்­தினர் காணி­க ளைப் பார்ப்­ப­தற்கு அனு­ம­திக்­காது திருப்­பி­ய­னுப்­பினர்.

இதனால் அம் மக்கள் பெரும் ஏமாற்­றத்­துடன் திரும்பிச் சென்­றனர்.

வளலாய் மேற்கில் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டி­லுள்ள மக்கள் காணி­களை பார்­வை­யி­டு­வ­தற்கு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தொடக்கம் எதிர்­வரும் 24ம் திகதி வரை அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்தது.

அதற்­க­மைய நேற்று வளலாய் கடற்­கரை, காங்­கே­சன்­துறை வீதி இரு­ம­ருங்கும் நீர் வாவிக்­கேணி உட்பட பலாலி கிழக்கு எல்லை வரை­யுள்ள காணி­களின் உரி­மை­யா­ளர்கள் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவில் இருந்து வளலாய் கிராம அலு­வலர் மூலம் வளலாய் மேற்கு மீள்­கு­டி­யேற்ற செயற்­கு­ழு­வுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து செயற்­கு­ழு­வினர் காணி­களைப் பார்­வை­யி­டு­வது தொடர்­பான அறி­வித்­தல்­களை பொது இடங்­களில் ஒட்­டி­ய­தோடு மேற்படி பகு­தியை சேர்ந்த மக்கள் இடம்­பெயர்ந்து வாழும் பகு­தி­க­ளிலும் அறி­வித்­தல்களை விடுத்­தி­ருந்­தனர்.

கடந்த 1990ஆம் ஆண்டில் சொந்த இடங்­களி­லி­ருந்து இட­ம்பெ­யர்ந்து பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கும் இன்­னல்­க­ளுக்கும் மத்­தியில் வாழும் மக்கள் 23 வரு­டங்­களின் பின்னர் நேற்று தமது வாழ்­வி­டங்­க­ளையும் பயிர்ச்­செய்கை நிலங்­க­ளையும் பார்­வை­யிடும் ஆர்­வத்­தோடு வாட­கைக்கு வாக­னங்­களை ஏற்­பாடு செய்து வளலாய் நோக்கிச் சென்­றனர்.

அவர்கள் வளலாய் பகு­தியை அண்­மித்து தமது காணி­களைப் பார்­வை­யிடச் செல்லும் போது, இரா­ணு­வக்­கட்­டுப் பாட்டுப் பகு­திக்கு பொது­மக்கள் செல்­வதற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது எனக்­கூறி அவர்­களை இராணு­வத்­தினர் தடுத்­து­ நி­றுத்­தினர்.

உங்­களை உட்­செல்ல அனு­ம­திக்­கு­மாறு தமக்கு எந்த கட்­ட­ளை­களும் வர­வில்லை எனக்­கூறி அவர்­களைத் திருப்பி அனுப்­பினர். நீண்­ட­நே­ர­மாக அவ்­வி­டத்தில் காத்­து­நின்ற மக்கள் பின்னர் ஏமாற்­றத்­துடன் திரும்­பிச்­சென்­றனர்.

வளலாய் மேற்கு இரா­ணு­வக்­கட்­டுப்பாட்டு பகுதி காணி­களில் தங்­களை குடியேற அனு­ம­திக்­க ­வேண்டும். தங்­க­ளது சொந்த நிலங்­களை தங்­க­ளிடம் ஒப்­படைக்க வேண்டும் என இங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்துள்ள 224 குடும்­பத்­தினர் முறை­யீடு செய்து பதிவு செய்­தி­ருந்­தனர்.

அவர்கள் தற்­பொ­ழுது வட­ம­ராட்சி, வட­ம­ராட்சி கிழக்கு உட்பட குடா­நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் இடம்­பெ­யர்ந்த நிலையில் வசித்து வரு­கின்­றனர்.

இது தொடர்­பாக வளலாய் மீள்­கு­டி­யேற்ற செயற்­குழு நிர்­வா­கிகள் கருத்துத் தெரி­விக்கையில், வள­லாயில் மேற்கு மீள்­கு­டி­யேற்­றத்தில் பல தட­வைகள் ஏமாற்­றப்­பட்­டு­ விட்டோம். அதில் நேற்று நடை­பெற்­றது பெரிய ஏமாற்றம்.

மக்கள் தமது இருப்­பி­டங்­க­ளையும் பயிர்ச்­செய்கை நிலங்­க­ளையும் ஒரு தட­வை­யேனும் நேரில் பார்வையிட இந்த முறை சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்பி வந்தனர்.

ஆனால் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடனும் கவலையுடனும் திரும்பிச் சென்றனர்.

எமக்கு காணிகளைப் பார்க்கலாம் என அறிவித்தவர்கள், தற்போது இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை என்ற அறிவித்தலை தெரிவிக்கவில்லை. இதனால் தான் நாங்கள் நம்பிக்கையுடன் வந்தோம் என்றனர்.

Tags: , ,

Leave a Reply