ஜூன் 10 இல் விசாரணைக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகும்: நவநீதம்பிள்ளை

navanethem-pillay2ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான எதிர்வரும் 10 ஆம் திகதி அமர்வில் உரையாற்றவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, அந்த உரையின் போது இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழு குறித்த தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் அமர்வில் தனது உரையின் போது ,இலங்கை குறித்து கருத்து வெளியிடவுள்ள நவிபிள்ளை விசாரணை குழு நியமனம் மற்றும் மற்றும் அதன் காலவரையறை தொடர்பான அறிவிப்பை செய்யலாம் என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்படவுளள உறுப்பினர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தற்போது ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் பலரது பெயர்கள் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கொபி அனானின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

அந்தவகையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள தனது உரையில் இலங்கை குறித்த விசாரணைக்குழுவின் விபரங்களை வெளியிடும் சாத்தியம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

விசாரணை குழு நியமனம் மற்றும் அதன் கட்டமைப்பு, காலவரையறை, விசாரணை செயற்பாட்டு முறைமை தொடர்பாக நவநீதம் பிள்ளை தனது உரையில் குறிப்பிடுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகும்போது முன்னைய கூட்டத் தொடரின் பின்னர் அதுவரை காலமும் இடம்பெற்ற விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை ஆணையாளர் விளக்கமளிப்பது வழக்கமாகும். அதன்படியே இலங்கை குறித்த விசாரணைக் குழு குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க இலங்கை அரசாங்கத்துக்கு, இந்த விசாரணைக் குழுவின் நியமனம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. நவநீதம் பிள்ளை பேரவை அமர்வில் இந்த விடயம் குறித்து குறிப்பிட்டாலும் விசாரணைக் குழு நியமனம் குறித்து இலங்கைக்கு உத்தியோகபூர்வமான முறையில் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை விசாரணை செயற்பாட்டுக்கான நிதியை மட்டுமே மனித உரிமை ஆணiயாளர் பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால் விசாரணைக் குழு மற்றும் அதன் கட்டமைப்பு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில் விசாரணை குழு நியமனத்தை நிராகரிக்கவுள்ள இலங்கை அரசாங்கம் மறைமுகமான தாக்கத்தை செலுத்தும் வகையில் மாற்று ஏற்பாடு ஒன்றை முன்னெடுக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் இலங்கைக்கு எதிரான பிரேரணையை உத்தியோகபூர்வமான முறையில் நிராகரித்துவிட்டது. அதனடிப்படையில் விசாரணை குழுவும் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்படும்.

இந்நிலையில் விசாரணைக் குழுவுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காவிடின் மனித உரிமைப் பேரவை ஜெனிவாவிலிருந்தவாறு விசாரணை செயற்பாட்டை வெளிமட்ட அடிப்படையில் முன்னெடுக்கலாம் என்ற நிலைமை காணப்படுகின்றது.

எனினும் விசாரணை செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் நேரடியாக பதலளிக்காவிடினும் மறைமுகமான முறையில் இலங்கை தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.

இலங்கை தொடர்பில் வெளிமட்ட விசாரணை செயற்பாடு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அது குறித்த மாற்று ஏற்பாடுகள் மறைமுகமான வகையில் முன்னெடுக்கப்பட்டு இலங்கையின் நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தெரியவருகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ளல் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படுவது தொடர்பான வாய்மூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடரிலும் பரந்துபட்ட முழுமையான ஆவண அறிக்கை எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது அமர்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Tags: , ,

Leave a Reply