ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக, ஐ.நாவின் நீண்ட கால இராஜதந்திரியும் முன்னாள் ஐ.நா. சமாதானக் காப்பாளரும் ஜோர்தான் நாட்டு இளவரசருமான யிட் அல் ஹுசைனை நியமிக்கப் போவதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ – மூன் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள் பல வற்றில் மனித உரிமை நிலைமைகள் குறித்த கவலைகள் எழும் நிலையில் அந்தப் பகுதிக்கான ஒரு குரலாக ஹுசைன் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராகத் தற்போது பணியாற்றிவரும் நவநீதம்பிள்ளை அம்மையாரின் பதவிக் காலம் ஜூலையுடன் முடிவடைவதை அடுத்தே, அந்தப் பதவிக்கு அல்ஹூசைன் முன்மொழியப்பட்டுள்ளார். இளவரசரான யிட் அல் ஹூசைன் ஐ.நாவுக்கான ஜோர்தான் நாட்டின் நிரந்தரப் பிரதி நிதியாகவும், அமெரிக்காவுக்கான தூதுவராகவும் ஏக காலத்தில் பணியாற்றியிருந்தார்.
பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் அவர் ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதி பதவியிலிருந்து விலகினார். பான் – மூன் ஐ.நா. செயலர் பதவிக்குப் போட்டியிட்ட போது அந்தப் பதவிக்கு இவரும் போட்டியிட்டிருந்தார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இவர் பேசும் போது, ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலை குறித்து மிகக் காத்திரமான கருத்துக்களை இவர் முன்வைத்திருந்தார்.
அங்கு முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத வன்முறைகளை நிறுத்த சர்வதேச சமூகமும் ஐ.நாவும் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.
இவரின் கருத்துக்களை அடுத்து ஆயிரக் கணக்கான ஐ.நா. அமை திப் படையினரை ரூவாண் டாவுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை 2012ஆம் ஆண்டில் ஓய்வு பெறவிருந்த நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இவ்வருடம் ஜூலை மாதம் ஓய்வு பெறவுள்ளார். ஓகஸ்ட் மாதத்தில் இருந்து புதிய மனித உரிமை ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
அனைத்துலக நீதி மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான விவகாரங்களில் யிட் அல் ஹுசைன் வலுவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதால், பான் கீ மூன் இவரை இந்தப் பதவிக்குத் தெரிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஐ.நா பொதுச் செயலர் இவரைத் தெரிவு செய்தாலும், பொதுச் சபையில் அதற்கான அங்கீகாரத்தைப் பெறவேண்டும். முன்னதாக, இந்தப் பதவிக்கு மர்சுகி தருஸ்மன், ஜோஸ் ராமோஸ் ஹோர்டா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.
எனினும், மேற்கு ஆசியாவைச் சேர்ந்த இளவரசர் யிட் அல் ஹுசைனை பான் கீ மூன் தெரிவு செய்துள்ளார்.
















