மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி முறைகளைக்கொண்டு கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்களை, விசேட அதிரடிப்படையினரை அழைத்து வந்து மிரட்டி,
மீனவர்களிடமுள்ள மீன்பிடி உபகரணங்களை மன்னார் கடல் தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் மெராண்டா பறிமுதல் செய்வதையும், குறித்த உபகரணங்களை மீனவர்களிடம் மீளவும் கையளிப்பதற்கு அவர் பணம் பேரம் பேசலில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இலங்கை முழுவதும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளான, டயனமைட் வெடி மருந்து, றோலர் படகுகள், சிலிண்டர்களை பாவித்து மீன் பிடித்தலும்,
தங்கூசி வலை, பட்டி வலை, கட்டை போட்டு மீன் பிடித்தலும் தடை செய்யப்பட்டுள்ள தொழில் முறைகளாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்,
கடமை தவறாத அதிகாரியாக தன்னை காட்டிக்கொள்ள முனையும் மெராண்டா, இலஞ்சம் பெற்றுக்கொண்டு, கரையோர மீனவ கிராமங்களுக்கு கிராமம் பக்கச்சார்புடன் செயல்பட்டு வருகின்றார்.
சட்டத்தை மீறி செயல்படும் மீனவர்கள் மீது மன்னார் மாவட்ட பொலிஸ் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, விசேட அதிரடிப்படையினரை அழைத்து வந்து மீனவர்களை மிரட்டி, மீனவர்களிடம் பணம் கறந்து வருகின்றார்.
அமைச்சர் றிசாட்டின் ஆசீர்வாதத்துக்குரிய இவர், இத்தனைக்கும் மீனவர்களுக்கு டயனமைட் மருந்து சப்ளையராக செயல்படும், அமைச்சர் றிசாட்டின் செல்வாக்குள்ள ஜஸ்டின் என்பவர் மீது எத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்ததில்லை.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைகள் மற்றும் உபகரணங்களைக்கொண்டு 300 க்கும் மேல்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னிலங்கை மீனவர்களுக்கு கடல்படையினரதும், இராணுவத்தினரதும் ஆதரவும் பாதுகாப்பும் எப்போதும் உள்ளதோடு, திருகோணமலை மாவட்ட ஆளும் கட்சி அமைச்சர் புஞ்சிநிலமே யும் மீனவர்களுக்கு தேவையான சகல வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி ஊக்கம் கொடுத்து வருகின்றார்.
கடல் தொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களே!
இலங்கை முழுவதும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் மூலம் மீன் பிடியில் ஈடுவது சட்டத்துக்கு முரணானது எனக்கூறும் நீங்கள், அந்த சட்டத்தை சிங்கள மீனவர்களுக்கு ஒருவாறும், தமிழ் மீனவர்களுக்கு ஒருவாறும் நடைமுறைப்படுத்துவதும், கடைப்பிடிப்பதும் இனப்பாகுபாடான செயலாகும்.
தங்கள் அமைச்சுக்கு கீழ் பணியாற்றும் குறித்த அதிகாரி, இலஞ்ச ஊழல்களுடன் தொடர்புடையவரென மீனவர்கள் குற்றம் தெரிவிக்கின்றனர். தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமித்து, மீனவர்கள் வஞ்சிக்கப்படாமல் தொழிலில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா?
-நைட்விசன்-
















