என்ன நடக்கிறது ஈராக்கில்? பாரதி தம்பி (விகடன்)

irak-war2ஈராக் என்ற நாடு, மனித குல நாகரிக வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. உலகின் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றான யூப்ரடிஸ் – டைகிரீஸ் நதிக்கரை நாகரிகம் முதல் சுமேரிய நாகரிகங்கள் வரை அங்குதான் தோன்றின. கல்வியிலும் பண்பாட்டிலும் ஒட்டுமொத்த உலகுக்கும் வழிகாட்டியாக இருந்த ஈராக் நாட்டின் நிலப்பரப்பை, மெசபடோமியா என்கிறது வரலாறு. ஆனால் இன்றைய ஈராக், ஒரு சுடுகாடு!

எங்கும் துப்பாக்கிச் சத்தம்; மரண ஓலங்கள்; பிணக் குவியல்கள். எப்போது என்ன நடக்கும், எதுவரை நாம் உயிரோடு இருப்போம்… எதுவும் ஈராக் மக்களுக்குத் தெரியாது. இப்போது நம்மை ஆட்சி செய்வது யார்? அரசாங்கமா… புதிய பயங்கரவாதக் குழுவா… என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. மொத்தத்தில் மத்திய கிழக்கின் நீண்டகால பதற்றப் பகுதியான ஈராக், இப்போது மறுபடியும் கொலைக்களமாகி உள்ளது.

ஈராக்கில் நடைபெற்று வரும் சிக்கல், தற்போது ஆரம்பித்தது அல்ல. அதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. சதாம் உசேன் காலத்தில் இருந்து ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையில் கடும் மோதல்கள் நிலவி வருவதை உலகம் அறியும். சதாம் உசேன், சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். இதனால் அவரது ஆட்சியில் ஷியா பிரிவு மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்; பலர் கொல்லப்பட்டனர். சன்னி-ஷியா பிரிவினருக்கு இடையிலான வெறுப்பு உணர்வு ஈராக் மக்கள் மனங்களில் ஆழ விதைக்கப்பட்டது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்திருந்த அமெரிக்கா, ஆரம்பத்தில் சதாம் உசேனின் செயலுக்கு தூபம் போட்டு வளர்த்துவிட்டது. பிறகு அவரது அதே செயல்பாடுகளைக் குற்றம் எனக் காரணம்காட்டி சதேம் உசேனைத் தூக்கிலும் போட்டது.

ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி 2003-ம் ஆண்டு அமெரிக்கா, ஈராக் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. மிகவும் வெளிப்படையான அந்த ஆக்கிரமிப்புக்கு உலகம் தழுவிய எதிர்ப்புகள் எழுந்தன. அந்தப் போரில் பங்கேற்ற பல அமெரிக்க ராணுவ வீரர்களும், அதிகாரிகளும்கூட பின்னர் குற்றவுணர்ச்சி தாளாமல் சாட்சியம் அளித்தனர். எனினும் எதையும் அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. ஒட்டுமொத்த ஈராக் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, அந்த நாட்டின் எண்ணெய் வளத்தின் பலன், தன் நாட்டுக்கு வருவதை உத்தரவாதப்படுத்திவிட்டு, கண்துடைப்பாகத் தேர்தல் நடத்தி தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு பொம்மை அரசை நிறுவி… இவ்வாறாக ஈராக்கில் ‘ஜனநாயகத்தை’ நிலைநாட்டியது அமெரிக்கா. ஆனால், இவையெல்லாம் பழைய கதை!

ஈராக்கில் இருந்து அமெரிக்கா கிளம்பிவிட்டாலும் அங்கு குண்டு சத்தம் ஓயவில்லை. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சிகள் வெடித்தபடியே இருந்தன. அதில் மதவாத இயக்கங்களின் பங்கு மிக அதிகம். அந்த நாட்டின் பண்பாட்டு வாழ்க்கையில் மதம் பிரிக்க முடியாத அம்சம் என்பதால், அதை ஒட்டியே அனைத்தும் நடைபெற்றன. சதாம் உசேனின் ஆட்சிக் காலத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டனர். அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரின் பின்னர் ஷியா முஸ்லிம் அரசு பொறுப்பு ஏற்றது. சன்னி – ஷியா இரு தரப்புகளும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் நவீன ஆயுதங்களுடன் மோதிக்கொண்டன. திடீர் திடீரென ஈராக் நகரங்களில் கார் குண்டுகள் வெடித்து, மனிதர்களைக் காவு வாங்கின. 2004-05 ஆண்டில் மட்டும் 1,239 கார் குண்டுகள் வெடித்துள்ளன.

இந்தப் பின்னணியில், தற்போது ஈராக்கின் பல பெரிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வருகிறது ஐசஸ் (ISIS – Islamic State of Iraq and Syria) என்ற அமைப்பு. இது ஒரு கடும்போக்கு சன்னி முஸ்லிம் இயக்கம். திடீரென ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கிளம்பிய இந்த இயக்கம், அல்-கொய்தாவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் என்றும், தாங்கள் ஒரு நாடு கடந்த சர்வதேச இயக்கம் எனவும் அறிவித்துக்கொண்டது. ஷியா பிரிவு முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று ஒழிப்பதன் வழியே இந்த இயக்கம் பிரபலம் அடைந்தது. இதன் மூலம் சன்னி முஸ்லிம்கள் மத்தியில் தன் ஆதரவுத் தளத்தை விரிவுப்படுத்தியது. ஈராக், சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து கடும்போக்கு இஸ்லாமியப் பிரதேசம் ஒன்றை உருவாக்குவது இந்த அமைப்பின் லட்சியம்.
சிரிய நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது அங்கு நிலைகொண்டிருந்த இந்த இயக்கம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஈராக்கில் ஊடுருவத் தொடங்கியது. இந்த அமைப்பில் ஜிகாதிகளாகச் சேர விரும்புவோருக்கு, தேச எல்லைகள் ஒரு நிபந்தனை அல்ல. இதனால் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐசஸ் இயக்கத்தில் இணைந்துள்ளனர். ரமாடி, ஃபலூஜா எனப் படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது இந்த இயக்கம். கடந்த வாரம் வடக்கு ஈராக்கின் மொசூல் நகரத்தைக் கைப்பற்றியபோது ஒட்டுமொத்த நாடும் அதிர்ந்தது. ஏனெனில், மொசூல் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரம். பாக்தாத்தில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரைக் கைப்பற்றிய உடனேயே, அருகிலுள்ள சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித், சமாரா, ஜலாலா, அல் அண்பார் ஆகிய பகுதிகளும் தீவிரவாதிகள் வசம் விழுந்தன. தொடர்ந்து பாக்தாத்தை நோக்கி இவர்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை பாக்தாத்தைக் கைப்பற்ற ஒரு யுத்தம் நடக்குமானால், அது மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பல லட்சம் உயிர்கள் கொல்லப்படலாம்.

இதனால் ஈராக் அதிபர் நூரி அல் மாலிகி, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார். இந்த முறை படைகளை அனுப்பிப் போரிடப்போவது இல்லை என்று முடிவுசெய்துள்ள அமெரிக்கா, வான் படைகளை அனுப்பலாம் என்று கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் தன்னால் நிலைநாட்டப்பட்ட ஜனநாயகம் என்ற அடிப்படையில், ஈராக்கில் அமெரிக்காவின் தோட்டாக்கள் வெடிப்பது நிச்சயம். இதற்கு இடையில் ஈரான் நாடும் ஈராக்குக்கு ராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. ஈரானில் அதிகபட்சம் இருப்பது ஷியா பிரிவு முஸ்லிம்கள். இப்போது ஈராக்கில் ஆபத்தில் சிக்கியிருப்பது ஷியா பிரிவினர் என்பதால், ஈரான் தானாக முன்வந்து உதவிசெய்ய வருகிறது. ஆனால் நிலைமை கைமீறிவிட்டது என்பதே சர்வதேசக் கண்காணிப்பாளர்களின் கருத்து.

ஐசஸ் அமைப்பினர், மொசூல் நகரத்தைக் கைப்பற்றியபோது அங்கு இருந்த மத்திய வங்கியைச் சூறையாடி 429 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஈராக் தினார்களை அபகரித்துக்கொண்டார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 2,500 கோடி. ஆக, இன்றைய தேதிக்கு உலகின் மிகப் பணக்கார இயக்கம் ஐசஸ்-தான். அது மட்டுமா… கைப்பற்றப்பட்ட மொசூல் நகரத்தில் ஈராக் ராணுவம் கைவிட்டுச் சென்றிருந்த விமானம், ஹெலிகாப்டர், நவீனரக ஆயுதங்கள் போன்றவையும் இப்போது அவர்கள் வசம். இதனால் நிதிபலம் மிகுந்த, நவீன ஆயுதங்களைக்கொண்ட ஒரு பிரமாண்ட இயக்கமாக அது உருவெடுத்துள்ளது. போதாக்குறைக்கு, அமெரிக்க கைப்பாவையாகவே மாறிவிட்ட ஈராக் அரசின் மீது வெறுப்பு உணர்வில் இருக்கும் சன்னி முஸ்லிம்களின் ஆதரவும், இந்தப் புதிய தீவிரவாதக் குழுவுக்கு இருக்கிறது. அரசின் மீதான மக்களின் எதிர்ப்பு உணர்வை, ஐசஸ் இயக்கம் அறுவடை செய்கிறது.

இவர்களை எதிர்கொண்டு சமாளிக்கும் பலமற்றதாக இருக்கிறது ஈராக் ராணுவம். அதாவது அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட ஈராக் ராணுவத்தால், முந்தா நாள் முளைத்த தீவிரவாதிகளைக்கூட எதிர்த்து நிற்க முடியவில்லை. பல பகுதிகளில் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டுப் பின்வாங்குகின்றனர் அல்லது சரண் அடைந்துவிடுகின்றனர். அப்படி எதிர்த் தாக்குதல் நடத்தாத பல ராணுவத் தளபதிகளை, பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் மாலிகி. இதற்கிடையில் ஷியா பிரிவு முஸ்லிம் அமைப்புகள் தன்னிச்சையாக ஆயுதக் குழுக்களை உருவாக்கி, ஐசஸ் அமைப்புக்கு எதிராகச் சண்டையிடத் தொடங்கியுள்ளனர். சாத்தியம் உள்ள இடங்களில் இவர்களும், அரசப் படைகளும் இணைந்துகொள்கின்றனர். சில இடங்களில் ஐசஸ் அமைப்பினர் கைப்பற்றிய பகுதிகளைத் திரும்பவும் இவர்கள் மீட்டுள்ளனர். எனினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த உள்நாட்டு யுத்தத்தில் தீவிரவாத அமைப்பினரின் கைகளே ஓங்கியுள்ளன.
இதுவரை சுமார் 5.5 லட்சம் மக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர். யுத்தம் நீடிக்கும்பட்சத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். மனிதர்களை விரட்டி அடித்துவிட்டு, மிஞ்சியவர்களைக் கொன்றுவிட்டு, இயற்கை வளங்களைச் சிதைத்துவிட்டு… எதை அடைய இந்த யுத்தம்? சுடுகாட்டை ஆட்சி செய்யவா!?

சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட மொசூல் நகரத்தில் சுமார் 40 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இவர்களில் அதிகபட்சம் பேர் கட்டடத் தொழிலாளர்கள். இதுபோக, 46 நர்ஸ்கள் அங்கு சிக்கியுள்ளனர். இவர்களில் ஆறு பேர் ஊட்டியைச் சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் தங்களது உறவினர்களுடன் தொடர்பில் இருந்த இவர்கள், இப்போது தொடர்பில் இல்லை. இதனால் இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் பணயத்தொகை கேட்பது, கோரிக்கைகள் வைப்பது போன்ற அறிகுறிகள் தென்படவில்லை. ஆகவே, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை உறுதி செய்யமுடியவில்லை. இப்படி யுத்தத்தில் சிக்கிக் காணாமல்போனவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்பதே இப்போதைய திக் திகீர் நிலவரம்!

Tags: , , ,

Leave a Reply