சிக்கன் 65 முதன்முதலில் கண்டுபிடித்தவர் யாரென்று தெரியுமா?

chicken65நாடு முழுவதும் இன்று மூலைமுடுக்குகளில் கூட எளிதில் கிடைக்கும் சுவைமிக்க உணவு பண்டமாக சிக்கன் 65 இருக்கிறது. இதனை அறிமுகப் படுத்தியவர்கள் யாரென்று நம்மில் பலருக்கு தெரியாது. இந்த பண்டத்தை நமக்கு புஹாரி ஹோட்டலின் உரிமையாளரும், தென் இந்திய உணவுத்துறையின் முக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஏ.எம். புஹாரிதான் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்.

புஹாரி ஹோட்டல் 1951ம் ஆண்டு அண்ணா சாலையில் தொடங்கப்பட்டதாகும். பிரியாணிக்குப் பெயர் போன ஹோட்டல்களில் இதற்குத் தனி இடம் உண்டு. இன்றளவும் புஹாரி பிரியாணி என்றால் நாவில் எச்சில் ஊறுவதை யாராலும் தடுக்க முடியாது.. அப்படி ஒரு அசாத்திய சுவை இந்த பிரியாணிக்கு உண்டு. சிக்கன் 65 என்ற ஐட்டத்தை அவர்கள்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினராம். அதன் பிறகுதான் அது தமிழகம் முழுவதும் பரவியதாம்.

1965ம் ஆண்டு புஹாரி ஹோட்டலில்தான் சிக்கன் 65 என்ற கோழி வறுவல் அறிமுகமானதாம். அந்த சிக்கனுக்குக் கிடைத்த வரவேற்பு பலமாக இருக்கவே குறுகிய காலத்திலேயே இந்த பதார்த்தம் பிரபலமாகி விட்டது.

சிக்கன் 65 பிரபலமானதைத் தொடர்ந்து 1978ல் சிக்கன் 78, 82ல் சிக்கன் 82, 1990ம் ஆண்டு சிக்கன் 90 என அறிமுகப்படுத்தியுள்ளனர். அமிதாப் பச்சன் நடத்திய முதலாவது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியிலும் கூட சிக்கன் 65 ஐ அறிமுகப்படுத்தியவர் யார் என்ற கேள்வியைக் கேட்டு ஏ.எம்.புஹாரி என்ற பதிலையும் கொடுத்துள்ளாராம். அதுவரை சிக்கன் 65 என்ற பதார்த்தமே இல்லை என்பதால் இதை தேசிய நாளிதழ்களில் விளம்பரமும் செய்து அமர்க்களப்படுத்தியுள்ளார் ஏ.எம். புஹாரி

அதை விட முக்கியமானது புஹாரியின் தாராள மனப்பான்மை. அதாவது இந்த உணவுப் பொருளுக்கு அவர் காப்புரிமை எதையும் பெற விரும்பவில்லை. தான் கண்டுபிடித்து அறிமுகம் செய்ததாக இருந்தாலும் கூட அனைவரும் இதை சாப்பிட்டு ருசிக்கட்டும் என்ற நோக்கில் காப்புரிமை பெறாமலேயே விட்டு விட்டாராம்.

அதேசமயம், சிக்கன் 65 என்ற பெயர் வந்ததற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். அதாவது சென்னையில் 1965ம் ஆண்டு இருந்த ராணுவ உணவகத்தில் விதம் விதமான உணவு வகைகளின் பெயர்களை உணவுப் பட்டியல் கார்டில் எழுதி வைத்திருப்பார்களாம். அதில் 65வது உணவாக இந்த சிக்கன் 65 இருந்துள்ளது.

மேலும், அப்போது உணவகத்திற்கு வரும் இந்தி மட்டுமே பேசப் படிக்கத் தெரிந்த வட மாநில ராணுவ வீரர்கள் நம்பர் 65 என்று சொல்லி, பின்னர் காலப் போக்கில் அது சிக்கன் 65 என்றானதாக தெரிகிறது

Tags: , ,

Leave a Reply