ஈழமும் வாழ்வீச்சுகளும் – தேவ அபிரா

eelam-fightsஅண்மைக்காலமாக ஈழப்பகுதிகளில் நிகழ்ந்து வரும் வாள்வெட்டுக்கள் கவனத்துக்குரியதும் கவலைக்கு உரியதுமான விடையங்களாக மாறியுள்ளன. கூகிள் தேடற் தளத்தில் “வாள்வெட்டு” எனச் தட்டச்சுச் செய்து தேடிப்பாருங்கள். கிடைக்கும் தகவல்களில் அனேகமானவை ஈழப்பகுதியை அல்லது ஈழத் தமிழர் சம்பந்தமானவையாகவே இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது. இவ் வாள் வெட்டுக்கள் வீட்டுக்குள் நிகழ்கின்றன; வீதியில் நிகழ்கின்றன வைத்திய சாலையினுள்ளும் நிகழ்கின்றன.

காதற்பிரச்சனை காணிப்பிரச்சனை கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனை குடும்ப உறவுகளுக்கிடையிலான பிரச்சனை போன்றவற்றிற் தொடங்கி குழுக்களுக்கிடையிலான அதிகாரப்பிரச்சனை வரை இந்த வாள்வெட்டு வன்முறை பிரயோகிக்கப்படுகிறது.

பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கிறார்கள். அண்மையில் ஒரு மாணவன் ஆசிரியர் தாக்கியதில் தனது ஒரு பக்கக் காதின் கேட்கும் சக்தியை இழந்து விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களிடையே உள்ள குழுக்களுக்கிடையில் மோதல்கள் நிகழ்கின்றன. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பகிடிவதை என்ற பெயரில் வன்முறைக்காளாகிறார்கள். மாணவர்கள் அதிகாரத்தின் வார்த்தை ரீதியான அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள். அண்மையில் ஒரு மாணவன் கீழ்வருமாறு எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

“விடைகொடுங்கள் நண்பர்களே

தூர்த்தன வார்த்தைகளினால்

துவண்டு போன நெஞ்சம் இன்று

உங்களை விட்டுப்பிரிந்து போகிறது”

வாள் கத்தி போன்ற கூரிய ஆயுதங்களினாலான தாக்குதல், மழுங்கிய கனமான ஆயுதங்களினாலான தாக்குதல் பலர் சேர்ந்து ஒருவரைத்தாகுதல் போன்ற பௌதிக ரீதியான தாக்குதல்களை விடவும் வேறுவகையான வன்முறை வடிவங்களும் பிரயோகிக்கப்படுகின்றன. பாலியல் ரீதியான வன்முறைகள் வாய்மொழி மூலமான வன்முறைகள் சமய ரீதியான வன்முறைகள் உணர்வு ரீதியான வன்முறைகள் உளவியல் ரீதியான வன்முறைகள் கலாசாரரீதியான வன்முறைகள் என வன்முறைகளின் வடிவம் விரிவானதாக இருக்கிறது. வன்முறைகளைக் கண்டும் (தடுக்கக் கூடிய வசதிகள் இருந்தும் ) அவற்றைத் தடுக்காது வேடிக்கை பார்ப்பது அல்லது விலகிச் செல்வதும் கூட ஒரு வகையான வன்முறையாகவே கணிக்கப்படுகிறது.

அடிப்படையில் வன்முறை உணர்வு எல்லோரிடத்தும் இருக்கிறது. அது எண்ணம் பேச்சு செயல் என்ற மூன்று வடிவங்களில் மனிதர்களிடத்தில் நிலவுகிறது. வன்முறை மீதான தனிமனித நாட்டத்துக்குப் பலகாரணங்கள் உள்ளன. வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதற்கான தயார் நிலையைப் பிறப்பினாலோ மிகச் சிறுவயதிலே கிடைக்கும் அனுபவங்களினாலோ ( சிறியவயதிலேயே கொடூரமான அனுபவங்களை எதிர் கொண்டு பழகியதினாலோ) அல்லது திட்டமிடப்பட்ட பயிற்சி முறைகளினாலோ அடைந்து விடுகிறார்கள்.

வன்முறையை மற்றவர்கள் மீது பிரயோகிக்க விரும்புவர்கள் தம்மிடம் இருக்கிற மற்றவர்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளும் திறனையும் அதனை மற்றவர்களுக்கு கடத்தும் திறனையும் மற்றவர்கள் மீதான இரக்க உணர்வையும் படிப்படியாகவோ சடுதியாகவோ முதலில் கொன்று விடுகிறார்கள்.

வன்முறையை மேற்கொள்ளுபவர் வன்முறைக்கு உட்படுபவரின் மீது தனது அதிகாரத்தைச் செலுத்துவதன் மூலம் தனது நோக்கங்களை அடைய முயல்கிறார். வன்முறையின் அடிப்படையான நோக்கமும் இதுதான்

Tags: , ,

Leave a Reply