புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் பாலிநகர் மகாவித்தியாலய பழைய மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுவதன் மூலம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது தாயகத்தை மீளவும் கட்டியெழுப்ப முடியும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாலிநகர் மகாவித்தியாலயத்தின் பொன் விழா கடந்த 7ஆம் 8ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
8ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றும் போதே ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது தாயக பிரதேசம் போர் ஆக்கிரமிப்பினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எமது மாணவர்களின் அடிப்படைக் கல்விக்கான போதிய அளவு வழங்கள் இதுவரையில் உரிய வகையில் அனைவரையும் சென்று சேரவில்லை. ஆனாலும் பாலிநகர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் தமது பாடசாலையை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள். பொன்விழா நிகழ்விற்கான ஏற்பாட்டில் புலத்திலிருந்து வந்து அவர்கள் நேரடியாக நின்று செயற்படுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எமது தேசத்தினை மீளவும் கட்டியெழுப்புவதற்கு எமது எதிர்கால சந்ததியினராகிய மாணவர்களின் மேம்பாடான கல்வியே பிரதமானதாக விடயமாகும். பாலிநகர் மகாவித்தியாலய பழைய மாணவர்களின் உழைப்பு எமது ஏனை பகுதி பாடசாலைகளுக்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் ஒரு வலுவான முன்னுதாரணமாகும் என்றும் தெரிவித்தார்.
பாடலை முதல்வர் திருமதி யோகராணி தில்லைநாதன் தலைமையில் மகாலிங்கம் கலையரங்கில் நடைபெற்ற இந் நிகழ்வில்,
முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சிறப்பு விருந்தினர்களாக மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தனியாகம், உப தவிசாளர் செந்தூரன் மற்றும் உறுப்பினர்களுடன்,
திருமதி ந.பரமேஸ்வரன்(பிரதிக்கல்விப் பணிப்பாளர், கல்வி முகாமைத்துவம்), இ.தமிழ்மாறன் (பிரதிக்கல்விப் பணிப்பாளர், திட்டமிடல்), பா.ஸ்ரீஸ்கந்தராஜா (பிரதி திட்டமிடல் பணிப்பாளர்), S.செல்வரட்ணம் (கோட்டக்கல்வி அதிகாரி, துணுக்காய்) ஆகியோரும் கலந்து கொண்டதுடன்,
நிகழ்வில் அயற் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பெருமளவானோரும் பங்குகொண்டு சிறப்பித்தனர்.
















