யாழ். வலி.வடக்கில் ஜே.226 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட உயர்பாதுகாப்பு வலையத்தில் உள்ள காணிகளில் 183 ஏக்கரை கடற்படையினரின் தேவைக்காக நிலஅளவைத் திணைக்களத்தினால்அளவீடு செய்யப்பட்டுள்ளது.
வலி.வடக்கில் 6300 ஏக்கர் மக்களுடைய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் சுவீகரிக்கப்பட்டுள்ளது. அதில் 183 ஏக்கர் காணி கடற்படையினரின் தேவைக்காக கடந்த 2 தடவைகளாக நிலஅளவைத் திணைக்களத்தினரின் உதவியுடன் அளவீடு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அந்த முயற்சி காணி உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டது.
எனினும் 3ஆம் முறையான இன்றையதினம் பொலிஸாரின் உதவியுடன் காணி அளவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வழமை போல காணி உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் கீரிமலையில் உள்ள கடற்படையினரின் முகாமிற்கு முன்னால் கூடியிருந்தனர்.
எனினும் பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லும் காங்கேசன்துறை வீதியால் நிலஅளவைத் திணைக்களத்தினரை அழைத்துச் சென்று அளவீட்டுப் பணியை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். இதனால் காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
இங்கு 35ற்கு மேற்பட்ட மக்களது காணிகள், சமாதி, மயானம் ஒன்றும் உள்ளடங்கியுள்ளது. அத்துடன் இராணுவத்தினரின் நிலச்சுவீகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















