உலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளிலும் ஒரு பக்கம் இருக்கிறது. தனி மனிதனாக இருந்தாலும் சரி குழுவாக இருந்தாலும் சரி இது ஒரு விதியாகவே இறக்கிறது.
இச் செயல்பாடுகள் அனைத்திலும் சரியின் பக்கம் அல்லது பிழையின் பக்கம், உண்மையின பக்கம் அல்லது பொய்யின் பக்கம், மக்கள் நலனின் பக்கம் அல்லது மக்கள் நலனுக்கு எதிரான பக்கம் என ஒரு பக்கம் இருக்கவே செய்கிறது. இது மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகவே உள்ளன. சரியின் பக்கமாயின் அது உண்மையின் பக்கமாகவும், மக்கள்நலனின் பக்கமாகவுமே இருக்கும். அதுபோல் பிழையின் பக்கமெனில் பொய்யின் பக்கமாகவும், மக்கள் நலனுக்கெதிரான பக்கமாகவே இருக்கும்.
இது இரண்டுக்கும் இடையில் எதுவுமே இல்லை என்பதே உண்மையாகும். ஒரு செயலைச் சரியாகச் செய்யவில்லையெனில் பிழையாகச் செய்கிறோம் என்பதே உண்மையாகும். இதில் நடுநிலைமை என்பது பிழையின் பக்கமாகவே எப்போதும் இருந்திருக்கிறது.
உலகில் குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற கீழைத்தேச நாடுகளிலும் உண்மையான செயல்பாட்டாளர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் தொகை குறைவான போதிலும் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இவர்கள் மௌனமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசியலில் ஈடுபடுவதே இல்லை. அரசியலில் உண்மைகளைக் கூட இவர்கள் வெளிப்படையாகப் பேசுவதில்லை. உயிருக்குப்பயந்து மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறகள்.
இந் நாடுகளில் அரசியல்வாதிகளில் பெரும்பகுதியினர் தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக அரசியலில் தங்களுக்கு எதிராக உண்மைகளைச் சொல்பவர்களை ரவுடிசத்தால் கொலை செய்கிற நிகழ்வுகளைக் கூட இப் பகுதிகளில் நாம் காண முடியும். முதலில் மிரட்டல் பாணியில் எச்சரிக்கை, அது சாத்தியமில்லாது விடில் கொலை செய்யவும் தயங்குவதில்லை. இக் கேவலமான நாகரிகமற்ற நிகழ்வுகளால் நல்லவர்கள் ஒதுங்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையாக இவர்கள்தான் அரசியலில் தலைவர்களாகவும் தலைமை உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் இந் நாடுகளில் இவர்களுக்குப் பதிலாக சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகள் அரசியலுக்கு வந்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று ஈழத்தமிழர்கள் மத்தியிலும் இதுதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவர்கள் அகதிகளாகப் போன மேற்க்கத்திய நாடுகளில் கூட இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு நாதன், கஜன், பரிதி ஆகியோரின் கொலைகளே உதாரணங்களாகும்.
உண்மையானவர்களை அரசியலில் ஈடுபட விடாது தடுப்பதே இவர்களின் முதல் நடவடிக்கையாகும். மக்கள் விழித்துக்கொள்ளும் போது இவர்கள் கடுதாசிப் புலிகளாக தூக்கி எறியப்படுவார்கள் என்பது உண்மையாயினும், அது வரைக்கும் எம் மக்களின் வாழ்வு நரகமாகவே இருக்கும். நாம் வீழ்ந்து கிடப்பதற்கு இதுவே முதல் காரணமாகும். மொத்தத்தில் இவை பிழையின் பக்கமாகமே இருக்கின்றது.
ஈழத்தமிழர்கள் இன்று நிலை குலைந்து நிற்பதையும் நாம் இப்படித்தான் பார்க்கவேண்டும். தலைவர் செல்வாவில் இருந்து தலைவர் பிரபாகரன் வரை உள்ள காலங்களில் உள்ள செயல்பாடுகளில் சரியான பக்கம் 95 வீதத்துக்கு மேலாகவே இருந்தது. இன்று அது இல்லாத நிலையே காணப்படுகிறது. இன்றைய தமிழ்த்தலைவர்கள் என சொல்லப்படுபவர்கள் எதிரியின் நிகழ்ச்சி நிரலிலையே, மொத்தத்தில் பிழையான பக்கத்திலையே தங்களது செயல்பாடுகளை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். என்பதே இதற்கு காரணமாகும்.
எதிரியின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பதைப் பார்ப்போம்:
1) தமிழ்மக்கள் ஒன்றுபட முடியாதவாறு பல தலைமைகளை உருவாக்கி ஊக்கிவிப்பது
2) தமிழ்மக்களின் தாயகத்தில் விகிதாசாரத்தை மாற்றும் திட்டங்களான சிங்களக் குடியேற்றங்களை நடாத்துவது, தமிழ்ப் பகுதிகளில் சிங்கள மக்களின் தொழில்த்துறைகளை ஊக்கிவிப்பது, இப் பகுதிகளில் சிவில்நிர்வாகத்தில் சிங்கள இராணுவத்தின் தலையீடு போன்றவற்றை தமிழ்த் தலைமை மௌனமாக இருப்பதன் மூலம் அங்கீகரிக்கச் செய்வது
3) ஐ நா சபையின் சட்டங்களுக்கு அமைவாகக் கூட போராட்டங்களை நடாத்த நாதியற்று இருப்பது, உடுபிடவையில் அழுக்குப்படாமல் நிகழ்சிகளை நடாத்த முனையும் இத் தலைமைகளின் பலயீனம்.
4) தமிழ் தாயகத்தில் சிங்கள இராணுவ எதோச்சதிகாரம் கோலோங்கி, மக்கள் சொல்லனாக் கொடுமைகளை அனுபவித்து, தாயகத்தையும் பறிகொடுத்துக்கொண்டிருக்கும் பரிதாபநிலையில் தளத்தலைமை பதுங்கிக் கொண்டு பயந்த நிலையிலும், புலம்பெயர் தலைமை ஒற்றுமையின்றியும் சரியான செயல்பாடின்றியும் இருப்பதனால் தளத்தில் உள்ள மக்கள் மேலும் மேலும் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.
5) ஈழத்தமிழ் மக்களின் அரங்கு இன்று மூன்று தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
1) தளம்
2) புலம்
3) தமிழகம்
இத்தளங்கள் அனைத்தும் செயலிழந்த அல்லது சரியாகச் செயல் பட முடியாத நிலையிலையிலையே இன்று இருக்கின்றன.
ஒரு சில அமைப்புகளின் சரியாகச் சிந்தித்த பொழுதிலும் ஒற்றுமையான செயல்பாடுகள் இல்லாததால் தான் உருப்படியாக எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறார்கள்.
இதில் புலம்பெயர் தளம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆனால் இங்கும் எதிரியின் நிகழ்ச்சி நிரலே நடைபெற்றுக்கொண்டிருப்பது தான் கவலைக்குரியதாகும்.
இவர்களின் செயல்பாடுகள் கூட பிழையின் பக்கமாக இருப்பது தான் மேலும் எமக்குச் சாபக்கேடாக உள்ளது
அ) எதிரியின் விருப்படி பல தலைமைகள் உருவாக்கப்பட்டு, மக்களைப் பிரித்து செயல்படாத்தன்மையை உருவாக்கியது.
ஆ) ஒற்றுமையை விரும்பிய செயல்பாட்டாளர்கள் பல தடவைகள் முயற்சிகளை எடுத்த போதிலும் அதற்கு ஒரு அமைப்பு மட்டும் எதிராக செயல்பட்டுக்கொண்டிருப்பது
இ) எதிரி எம்மை நேரடியாகவும், தமது கைக்கூலிகளான எமது கோடாரிக்காம்புகளைக் கொண்டும் அழித்துக்கொண்டிருக்கும்போது, இவர்கள் எம் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்ப்படுத்துவது எதிரியின் நிகழ்ச்சி நிரல் இல்லையா?
6) இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டிருந்தால் தமிழகத்திலும் எமக்கு ஆதரவான ஒற்றுமையான நிலையை ஏற்படுத்தியிருக்க முடியும்.
7) “ஒருமைப்பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்” என்ற பழமொழிக்கமைய நாம் அழிந்து கொண்டிருக்கிறோம்.
8) ஒன்றுபட முடியாது விடில் தயவு செய்து தமிழீழம் என்று எமது தலைவரும் தந்தை செல்வாவும் உச்சரித்த அந்தப் புனிதமான வார்த்தையை நீங்கள் உச்சரிக்காதீர்கள். நீங்கள் இப்படிச் செய்வது எமது புனிதமான தலைவருக்கு மாத்திரமன்றி, மாவீரர்கள்,போராளிகள், தளத்தில் உள்ள பல தியாகங்களைச் செய்த எமது மக்களுக்கும் செய்யும்மாபெரும் துரோகமாகவே முடியும்.
தமிழீழத் தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு, தலைவரின் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பதால் மட்டும் தமிழீழம்
உருவாகிவிடாது.
ஒன்றுபட்ட தலைமையினாலும் ஒன்றுபட்ட மக்களின் செயல்பாட்டினால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஒன்றுபட முடியாதவர்கள் தயவுசெய்து ஒதுங்கி நில்லுங்கள். மீண்டும் மீண்டும் வேண்டி கொள்கிறோம்
– மாறன்
















