முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவதூறு கட்டுரை வெளியானதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க தலைவருடன் எத்தனையோ கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் இழிவான விமர்சனங்களை திமுக எப்போதும் ஆதரிக்காது என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை சிங்களவாத அரசின் பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வமான இணையதளத்தில், தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், தமிழக முதலமைச்சரை அநாகரிகமாக இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
அ.தி.மு.க. தலைவருக்கும், நமக்குமிடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவர் தமிழக மீனவர்களின் இன்னல்களைக் களையும் விதத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தும் அளவுக்கு சிங்கள அரசினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து சிங்கள அரசின் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதை யாவரும் புரிந்துகொள்ள முடியும்.
பொதுவாக இதுபோன்ற இழிவான விமர்சனங்களை தி.மு.க. எப்போதுமே ஆதரிப்பதுமில்லை. அந்த கடுமொழிகளை, இழிமொழிகளைக் கண்டிக்கத் தவறியதும் இல்லை. அப்படிப்பட்ட சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்துகொள்ளக்கூடாது என்றுதான் தமிழகத்தின் சார்பில் அனைத்து கட்சியினரும் தொடர்ந்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.
அந்த கட்டுரை இழிவுபடுத்தியிருப்பது தமிழக முதலமைச்சரை மட்டுமல்ல; இந்திய நாட்டு பிரதமரையும்தான் இழிவுபடுத்தியிருக்கிறது என்ற எண்ணத்தோடு, இந்த பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
















