ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள, சிறிலங்கா குறித்த விசாரணைக் குழுவுக்கு, ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்களைக் கொண்ட குழு வரும் வாரம் பிரித்தானியா செல்லவுள்ளது.
பின்லாந்தின் முன்னாள் அதிபரும், நோபல் பரிசு பெற்றவருமான மார்டி அதிசாரி, நியுசிலாந்தின் முன்னாள் நீதிபதி சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தானின் சட்ட நிபுணர் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரைக் கொண்ட இந்தக் குழு, லண்டனில் முறைசாராக் கூட்டங்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவினர், தமக்கு உதவுவதற்காக, உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும், நிபுணர்களைத் தெரிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம், பிரித்தானிய இராஜதந்திரி சன்ட்ரா பெய்டாஸ் தலைமையில் 12 பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது.
அதேவேளை, இந்த விசாரணைக்குழு, ஜெனிவாவுக்கு வெளியே சாட்சியங்களைப் பதிவு செய்வது தொடர்பான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு வெவ்வேறு வெளிநாட்டுத் தலைநகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக,வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணை முதற்கட்டமாக, ஜெனிவாவில், ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக, தற்போது ஆராயப்பட்டு வருகிறது.
இந்த மாத இறுதியில், முறையான செயல்முறைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், முறைப்பாடுகளை வகைப்படுத்துவதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறியப்படுகிறது.
ஜூலை நடுப்பகுதியில் தான் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் எதிர்பார்த்தனர்.
அது, சாட்சிகளிடம் சாட்சியங்களைப் பெறுவதையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
கையில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக, ஜெனிவாவில் இருந்து சிறிலங்காவில் உள்ள சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஸ்கைப் மூலமான நேர்காணல் மேற்கொள்ளப்பட்டதாக, இந்த செயல்முறைகளுடன் தொடர்புடைய வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
இது ஒரு அடிப்படையான நடவடிக்கை என்று கூறப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
















