விஜய்யின் கத்தி படத்தை எதிர்ப்பது சரியா?

Kaththi-posterவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் கத்தி படத்தை எதிர்ப்பது என்பதில் சில அமைப்புகள் உறுதியாக இருக்கின்றன. படம் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்ப்பாளர்களைச் சந்தித்து விளக்கிய பின்பும் நிலைமை சீரடையவில்லை.

கத்தி படத்தை ஐங்கரன், லைகா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றன. இதில் லைகா புரொடக்ஷனின் நிறுவனர் சுபாஸ்கரண் அல்லிராஜா, இலங்கை அதிபர் ராஜபக்சேயின் நெருங்கிய உறவினர்களுடன் தொழில்முறை கூட்டு வைத்துள்ளார் என்பதுதான் குற்றச்சாட்டு. அது குறித்து ஈழத் தமிழர்கள் நடத்தும் இணையத்தளங்கள் ஆதாரத்துடன் கட்டுரை வெளியிட, தமிழகத்தில் கத்திக்கு எதிர்ப்பு உருவாகியது. கத்தி விஜய் படம் என்பதால் எதிர்ப்பு தீவிரமடைந்தது. அதற்குக் காரணம் உண்டு.

நடிகை அசின், திரையுலகின் எதிர்ப்பை மீறி இலங்கை சென்றதுடன், இலங்கை அரசின் தூதுவர் போலவே செயல்பட்டார். அது தமிழர்களின் மனத்தில் கசப்பை உருவாக்கியது. அவரைத் தமிழ்ப் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. அசினுக்கு யாரும் வாய்ப்பு தர தயங்கிய நிலையில் விஜய்யின் காவல்காரன் படத்தில் அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். விஜய் நினைத்திருந்தால் அசினை தவிர்த்து சர்ச்சையிலிருந்து விலகியிருக்க முடியும். ஆனால் எதிர்ப்பை மீறி அசின் விஜய்யின் நாயகியானார். இப்போது சர்ச்சைக்குள்ளான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். அதனால் இது திட்டமிட்ட செயல்தானோ என இயல்பாகவே சந்தேகம் வர வாய்ப்பு உள்ளது.

ஆனால் இவையெல்லாம் ஒரு படத்தைத் தடை செய்யவும், அதனை எதிர்க்கவும் காரணமாகிவிடுமா? இலங்கையுடன் தொழில்முறை உறவு வைத்திருக்கும் எத்தனையோ வர்த்தக நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. எத்தனையோ பேர் இலங்கையுடன் வர்த்தகம் செய்து வருகின்றனர். அவர்களையெல்லாம் விடுத்து கத்தியை மட்டும், அதனைத் தயாரித்தவர் இலங்கை அதிபரின் உறவினர்களுக்கு நெருக்கமானவர் எனக் கட்டம் கட்டுவது சரியான நடவடிக்கைதானா?

Tags: ,

Leave a Reply