யுத்த குற்றங்கள் தொடர்பிலான உண்மையான சாட்சியங்களை அறியப்படுத்துவதில் எவ்வித குற்றமும் இல்லை

sumanthiran1போர்க் காலத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பிலான உண்மையான சாட்சியங்களை ஐ.நா. விசாரணைக் குழுவினரிடம் அறியப்படுத்துவதில் எவ்வித குற்றமும் இல்லை. இவை அரசியலமைப்பை மீறும் செயற்பாடுகளுமில்லை என தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான செயற்பாடுகளுக்கு சட்டத்தில் இடமிருக்கின்றது என்பது அரசாங்கத்திற்கு தெரியாவிடின் இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டது.

ஐ.நா. விசாரணைக் குழுவிடம் இலங்கையில் உள்ளவர்கள் வழங்கவுள்ள சாட்சியங்களை கொண்டே அவை அரசியலமைப்பிற்கு முரணானதா இல்லையா என தீர்மானிப்போம் என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் வினவிய போதே அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களிடம் தமது சாட்சியங்களை வழங்க முன் வருவோர் எம்மிடம் வருமாறு ஆரம்பத்தில் தெரிவித்திருந்தோம். இவ்வாறு எமது சாட்சியங்களை உரிய இடத்திற்கு வழங்குவதில் குற்றம் ஏதும் இல்லை.

யுத்த கால கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் நடந்த நிகழ்வுகளை அறிக்கையிட உரிமை உள்ளது. இவற்றை குற்றமாக கருதி தடுக்க முயற்சிப்பது தெளிவாகத் தெரிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு சட்டத்தில் இடம் உள்ளது என்பதை அரசாங்கமும் ஊடகப் பேச்சாளரும் இதுவரையில் தெரிந்து கொள்வில்லை எனின் இனிமேலாவது தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதேபோல் இவ்வாறான சாட்சியமளிக்கும் செயற்பாடுகள் சர்வதேச சட்டத்தின் கீழ் இடமளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாகவே நாமும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply