கடந்த சில மாதங்களாக ‘வவுனியா பொடியன்’ என்ற பெயரில் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்கொன்றை இயக்கி வந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிறுவன் ‘வவுனியா பொடியன்’ என்ற பெயரில் வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூகத்தில் அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து வந்திருந்தான்.
இது மட்டுமல்லாது, இவனும், இவனது நண்பர்கள் சிலரும் மற்றும் வெளிநாடுகள் சிலதில் வதியும் இவர்களின் நண்பர்கள் சிலரும் இணைந்து பல போலி முகநூலை (பேஸ்புக்) ஆரம்பித்து, அரசியல் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியைகள் சமூகத்தில் மிகவும் அறியப்பட்டவர்களை புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து வந்திருந்தனர்.
இதில் பல முகநூல்கள் (உன்னைப் போல் ஒருவன், நியாயமான விசாரணை, வவுனியா தமிழன்) பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து ஏற்கனவே முடக்கப் பட்டு விட்டது.
இதனை அடுத்து தற்போது “வவுனியா பொடியன்” -தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்-, “வவுனியா மக்களுக்காக” போன்ற பல போலி முகநூல்களை இயக்கி வந்தனர். இதனைத் தொடர்ந்து வவுனியாவில் உள்ள சிலரால் எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக இவர்களில் ஒருவனான மேற்படி கிருசாந்த் என்பவன் நேற்றிரவு கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு அவரது முகநூலும் கைப்பற்றப்பட்ட பின்னர் அப்பிரதேச கிராம அலுவலகர் மூலம் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டதுடன், இவரது நண்பர்கள் சிலரும் கைது செய்யப்பட உள்ளதுடன், இவர்களுக்காக வெளிநாட்டில் இருந்து செயல்படுபர்களின் போலி முகநூல்களும் கைப்பற்றப்பட்டு சம்பந்தப் பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
நேற்று கைப்பற்றப்பட்ட “வவுனியா பெடியன்” எனும் முகநூளில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை நாம் கீழே பிரசுரித்து உள்ளோம். இதில் இவர் தமது பாடசாலை (வவுனியா விபுலானந்தாக் கல்லூரி) உபஅதிபர் முரளிதரன் என்பவருக்கு எதிராக செயற்பட்ட நடவடிக்கையின் ஆதாரம் பிரசுரிக்கப் பட்டுள்ளது. மேலதிக தகவலும், படங்களும், ஆதாரங்களும் விரைவில் பிரசுரமாகும்.
இதேவேளை மேற்படி இளைனன் “கிருசாந்த் கிரு” எனும் தனது பெயரிலும், உண்மையான முகநூலை நடத்தி வந்துள்ளான். அதில் தனது பாடசாலை ஆசிரியர்கள், ரியூசன் ஆசிரியர்கள், மற்றும் தனது நண்பர்களை “வல்லவர்கள், நல்லவர்கள்” என்று எழுதி விட்டு, இந்த போலி முகநூல்கள் மூலம் அவர்களை, “அவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து” வந்திருந்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதேவேளை *மேற்படி பெயர், படம், விலாசம் எதுவும் இல்லாத முகநூல்களில் தம்மை நண்பர்களாக இணைத்துக் கொண்டு இருப்பவர்கள், அதில் இருந்து தமது நட்பை நீக்கி விடுவதன் மூலம் சட்ட சிக்கல் பிரச்சினையில் இருந்து விலக முடியும்” எனவும் வவுனியா சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை மேற்படி இளைனர் குழுவுடன் இணைந்து செயல்பட்டதாக கருதப்படும் சிலர், “தமக்கும், இதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென ஒதுங்க முற்படுவதாகவும்” தெரிய வருகின்றது.
-வவுனியாவில் இருந்து உமாதாசன்.
















