இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நேற்றைய தினம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுகிறார்கள் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும். இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தமிழக மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையானது மனித நேயமற்ற பயமுறுத்தும் நடவடிக்கையாகும் கைதுசெய்யப்படும் மீனவர்களின் படகுகள் தடுத்துவைக்கப்படுவதால் அவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தமது ஆலோசனையின்படியே இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களின் படகுகளை தடுத்து வைத்துள்ளதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்து தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாக மீனவ சமூகம் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இது இந்திய மத்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தாக இருக்காது என்று தாம் நம்புவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவது தமிழக அரசாங்கத்துக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
















