சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளியின் வங்கிக் கணக்கிற்கு 2 கோடி ரூபா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பணமானது இலங்கையிலிருந்து இணையம் மூலம் அவருக்கு பரிமாற்றப்பட்டுள்ளது. இது அவருக்கு உளவு பார்த்ததற்கான கூலியாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபரின் இல்லத்தில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது இது சிக்கியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராசன் என்பவர் பாகிஸ்தான் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அவரது தந்தை கொழும்பில் ஹோட்டல் நடத்திவந்துள்ளார்.
ஆனால் அந்த தொழில், இலாபத்தை தரவில்லை என்பதால் இலங்கையில் போர் மூண்டபோது, அருண்செல்வராசன், தனது பெற்றோருடன், சென்னை வந்துள்ளார். இலங்கையில் தனது பாடசாலை படிப்பை சென்னையில் தொடர்ந்த அருண் செல்வராசன் 8ஆவது வகுப்பு முதல் 10ஆவது வகுப்பு வரை சென்னையில் படித்துள்ளார். 2008ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்று அங்கு படித்தார். படிப்பு முடிந்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த அருண் செல்வராசன் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு அலுவலகத்தை நடத்தி வந்தார். இவரை கடந்த ஒரு மாத காலமாக கண்காணித்து வந்த நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் இவருக்கு ஏற்கனவே பாகிஸ்தான் உளவாளிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தமீம் அன்சாரி மற்றும் சாஹிர் உஸைன் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















