ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 20ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார். இதனால் வரும் 20ஆம் தேதிக்கு பின்னர் ஜெயலலிதா பதவியில் நீடிப்பாரா?என்பது குறித்து இப்போதே அதிமுக வட்டாரத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
மேலும் ஜெயலலிதாவின் ஆலோசகர்கள் தீர்ப்புக்கு முன்னர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ஒருவேளை தீர்ப்பு சாதகமாகவந்தால் மீண்டும் பதவியேற்றுக்கொள்ளலாம் என்பது அவர்களது ஆலோசனை. ஆனால் இன்னொரு தரப்பு அவ்வாறு ராஜினாமா செய்தால் நாமே தண்டனை கிடைக்கும் என ஒப்புக்கொள்வதாக ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் தீர்ப்பு என்னவாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ள ஜெயலலிதா தயாராகிவிட்டார் என்றே அதிமுகவினர் கூறிவருகின்றனர். பொதுச்செயலாளராக மீண்டும் சமீபத்தில் பதவியேற்ற ஜெயலலிதா, அந்த நிகழ்ச்சியில், ‘தீர்ப்பு எப்படி இருந்தாலும் நான் நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்பேன், கட்சியினர் ஒற்றுமையாக இருந்தால் போதும் என்று பேசியிருக்கின்றார். இதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் அதிமுகவினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.
















