தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளின் பினாமி! பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ள சுமந்திரன்.

sumanthiran9கடந்த 2010ம் வருட நாடாளுமன்றத்தேர்தலில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற போனஸ் ஆசனத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன், இப்பொழுது இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரப்பிரிவு பொறுப்பாளர் பதவியை ஏற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் பெற்றவுடன், “தான் ஒருபோதும் எந்தக்கட்சியின் பின்னாலும் செல்லமாட்டேன். கூட்டமைப்பின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுவேன்.” என்று சுருதி பிசகாமல் உச்சஸ்தானியில் வாசித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இன்று தமிழரசுக்கட்சியின் நிர்வாகசபையில் அங்கத்துவம் பெற்றதும், தாளக்கட்டில்லாமல் தறி கெட்டு வாசிக்கின்றார்.

தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரப்பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டதையடுத்து, தனது நண்பர் ஒருவரிடம்,

“எமது கட்சியின் வெளிவிவகாரப்பிரிவும், கட்சியும் சரியாகச்செயல்பட்டால் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு (ரி.என்,ஏ) அவசியம் இருக்காது. ரி.என்.ஏ இன்னமும் புலிகளின் பினாமியாகவே பார்க்கப்படுவதால்தான், நாம் தமிழரசுக்கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றோம். இந்த உண்மையை இப்பொழுது வெளியில் சொல்ல முடியாதிருப்பதால்தான் நாம் எமது கட்சியை முன்னெடுத்துச்செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

பல ஆயிரம் மாவீரர்களினதும், இலட்சக்கணக்கான பொதுமக்களினதும் உயிர்த்தியாகங்களின் பலனாக கிளிநொச்சி மண்ணிலிருந்து தோற்றம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பை, சிதைத்து அழித்து நிர்மூலமாக்கியே தீருவோம்! என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் தமது (SSV க்களின்) வெறித்தனத்தை இதனூடாக வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை இல்லாதொழிப்பதற்கான இரா.சம்பந்தனின் நிகழ்ச்சிநிரலின் பிரகாரம் விக்கி, கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகள், ஆதரவாளர்கள் மேற்கொண்ட பிரசாரத்தின் காரணமாக ஆரம்பத்தில் வெறுத்தொதுக்கிய முதலமைச்சர் வேட்பாளரை, பின்னர் மெல்ல மெல்லமாக வடக்கு மாகாண மக்கள் ஏற்றுக்கொண்டு அவருக்கு அமோக ஆதரவளித்து மிக அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றியடையச்செய்தனர்.

இவரும் தேர்தலில் களமிறங்குவதற்கு முன்னர், “தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டால் மாத்திரமே, தான் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக” தெரிவித்திருந்தார்.

தேர்தலில் வெற்றிபெற்றவுடன் இவரும் கூட்டமைப்பைச்சீர்குலைக்கும் சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலில் இணைந்துகொண்டு, அண்மையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் கட்சியின் வெளிவிகாரப்பிரிவில் அங்கத்துவமும் பெற்றுள்ளார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “அரசியல் கைதிகளின் வழக்கை நடத்துவதற்கு கட்சியிடம் பணம் இல்லை” என்று நொண்டிச்சாட்டு சொன்னவர். வடமாகாண முதலமைச்சர் அண்மையில் சட்டமா அதிபரிடம் தனக்குள்ள தனிப்பட்ட நட்பைப்பயன்படுத்தி அவர்களின் விடுதலை தொடர்பாக பேசியுள்ளதாகக்கூறுகின்றார். ஒருவர் பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. மற்றவர் பதவியேற்று ஒருவருடம் ஆகின்றது.

இவர்கள் இருவருமே சட்டத்துறையுடனும் நீதித்துறையுடனும் தொடர்புடையவர்கள். இவர்களுக்கு உண்மையிலேயே இனத்தின் மீதும் தமது மக்களின் மீதும் அக்கறை இருக்குமானால் முதலில் சட்டரீதியாக அவர்களின் பிரச்சினைகளை அணுகிவிட்டு அதன்பிறகே பதவிக்கு வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் இவர்களின் மீதான மதிப்பு இன்னமும் பலமடங்கு அதிகரித்திருக்கும்.

வடக்கு கிழக்கில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் எத்தகைய பங்களிப்பையும் வழங்கியிராததுடன், எமது மண்ணில் நடைபெற்ற துயரச்சம்பவங்களினால் எவ்வித பாதிப்பையும் வலியையும் சந்தித்திராதபோதும் இவர்கள் எமது மக்களின் வேதனைகளை, பிரச்சினைகளை அநுபவ ரீதியாக இல்லாவிட்டாலும், மனிதநேயத்துடனாவது புரிந்துகொள்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், இவர்களின் செயல்பாடுகள் 0- பெறுபேற்றையே காட்டுகின்றது.

கூட்டமைப்பை பலப்படுத்துவதற்குப்பதிலாக தனி ஒரு கட்சியைப்பலப்படுத்த முயற்சிக்கும் இவர்கள், கூட்டமைப்பையே இல்லாமல் ஒழிக்கும் நடவடிக்கைக்கும் துணைபோகின்றனர். இவர்களின் செயல் தொடருமானால் இவர்களுக்கு எதிராகவும் மக்கள் போராட வேண்டிய சூழல் உருவாகும். மக்கள் திரண்டு போராடுவதற்கு முன்னர் இருவரும் மக்களுடன் இணைந்து தாங்கள் மக்களுடனும் கூட்டமைப்புடனும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிடில் மக்கள் தமது போராட்டத்தைத்தாமே கையில் எடுக்கும் சூழல் உருவாவதைத்தடுக்க முடியாமல் போய்விடும்.

Tags: , ,

Leave a Reply