இலங்கை சிறையில் தூங்கக்கூட இடமின்றி தவித்தோம். மேலும் சுகாதார மற்ற குடிநீர், தூர்நாற்றம் வீசிய உணவு போன்றவற்றை வழங்கினார்கள் என்று விடுதலையான இராமேஸ்வரம் மீனவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
கச்சதீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்கின்றனர். கடந்த மாதம் இராமேஸ்வரம், தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 36 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இந்நிலையில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 76 பேரை விடுவிக்க அந்நாட்டின் அதிபர் ராஜபக்ச உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம், தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த 36 மீனவர்கள் விடுவிக்கபட்டனர். அவர்கள் நேற்று இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, மாலையில் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். இராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் கூறுகையில், இலங்கை சிறையில் எங்களை சிங்கள கைதிகளுடன் அடைத்து கொடுமைப்படுத்தினர். இதனால் சிறையில் தூங்கக்கூட இடமின்றி தவித்தோம். மேலும் சுகாதார மற்ற குடிநீர், தூர்நாற்றம் வீசிய உணவு போன்றவற்றை வழங்கினார்கள் என்று கண்ணீர் மல்க கூறினர்.
















