ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?: கர்நாடக நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது, அவரது தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் வாதம் முடிவடைந்த நிலையில், சசிகலா மற்றும் இளவரசி தரப்பு வாதம் தற்போது நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 27ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. மற்ற மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். இதையடுத்து, 4 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதா உள்பட 4 பேர் ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி சந்திரசேகர் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் ராம்ஜெத் மலானியும், அரசு தரப்பில் பவானிசிங்கும் ஆஜராகி வாதிட்டனர்.
ஜெத்மலானி 1 மணி நேரம் வாதம்
முதலில் வாதிட்ட ராம் ஜெத்மலானி, “லில்லிதாமஸ், ரவி பாட்டீல் வழக்குகள், தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்கிய உதாரணமாக இருக்கிறது. அதை பரிசீலித்து இந்த வழக்கிலும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
மேலும், அவரது உடல் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் எங்கேயும் போய்விட மாட்டார். நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடும்போது தவறால் ஆஜராவார். ஜெயலலிதா சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது, 100 கோடி ரூபாய் அபராதம் கட்டிவிட்டீர்களாக என்று நீதிபதி கேட்டார். இதற்கு பதில் அளித்த ராம்ஜெத் மலானி, ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் அபராதத் தொகையை உடனே கட்ட தயாராக இருக்கிறோம் என்றும், அரசு தரப்பு கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம் என்றும், லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கியதுபோல் ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்ப்பு
இதையடுத்து, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். அப்போது, ஜெயலலிதா வெளியே வந்தால் வழக்கை திசை திருப்புவார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றார்.
சசிகலா வழக்கறிஞர் வாதம்
இதைத் தொடர்ந்து, சசிகலா மற்றும் இளவரசி தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதி்ட்டார். அப்போது, ” “சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை. சொத்து சேர்க்க சசிகலா உடந்தையாக இருந்தார் என்பதை ஏற்க முடியாது. தனது கட்சிக்காரர்களின் உடல் நிலையை முதன்மையாக நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். ஜாமீன் கேட்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஏனென்றால் வழக்கில் மேல்முறையீடு செய்யவும் மனு செய்துள்ளோம்” என்று வாதிட்டார்.
144 உத்தரவு
இதனிடையே, ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனு விசாரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் 1 கி.மீ. தூரத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
















