ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு! கர்நாடகா உயர்நீதிமன்றம்

jayalalithaதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மற்றும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பிற்கு எதிரான மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

73-வது வழக்காக பட்டியலிடப்பட்ட இந்த வழக்கை, உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இதனை மறுத்த நீதிபதி, கர்நாடகா காவல்துறையினரின் கோரிக்கைக்கு பின்பு, காலை 11.25 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.

ஜெயலலிதா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, 4 வருட ஜெயில் தண்டனை என்பதால் அரசுத் தரப்புக் கருத்தைக் கேட்காமலேயே ஜாமீனில் விடுதலை செய்யலாம். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது வயதையும், உடல்நிலையையும் கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்.

ஏற்கனவே நீதிமன்றம் அழைத்த போது தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜரானவர் ஜெயலலிதா. எனவே ஜாமீன் வழங்கினால் எங்கும் ஓடி விட மாட்டார். வழக்கில் சாட்சிகள் பெரும்பாலானோர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாகத் தான் சாட்சி வழங்கியுள்ளனர். அரசுத் தரப்பில் சொத்தின் மதிப்பு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் பவானிசிங், அவர் மிகுந்த செல்வாக்கு மிகுந்த தலைவர். ஜாமீனில் விடுதலை செய்தால் சட்டத்தின் பிடியிலிருந்து அவர் எளிதில் தப்பி விடுவார் என்று கூறினார்.

இதற்கிடையே மதிய உணவு இடைவேளைக்காக மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் ஒருமுறை வாதத்தைத் தொடங்கிய ராம்ஜெத்மலானி, சுதாகரனின் திருமண செலவுகள் என்று தவறான கணக்கு காட்டப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா, அரசுத் தரப்பு சாட்சி போலவே நடந்து கொண்டார் என்று குறிப்பிட்டார்.

அனைத்துத் தரப்பு விசாரணையையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கும் ஜாமீன் வழங்கவில்லை.

இதற்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதாக தவறான தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply