அரசு திட்டங்களில் ‘அம்மா’ படங்களை எடுக்காவிட்டால் நீதிமன்றத்துக்கு செல்ல திமுக முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.
இதனால் அவரது முதல்வர் மற்றும் சட்டசபை மக்கள் பிரதிநிதி ஆகிய பதவிகள் பறிபோயுள்ளன.
இந்நிலையிலும், குடிநீர் பாட்டில், உப்பு பாக்கெட் போன்றவற்றின் மேல் ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசில் அங்கம் வகிக்காத ஒருவரின் படத்தை அரசு திட்டங்களில் பயன்படுத்துவது வழக்கம் கிடையாது.
ஜெயலலிதா தற்போது ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பதவியில் மட்டுமே இருப்பதால் அரசுக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது என்பதே சட்ட விதி.
இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஜெயலலிதா புகைப்படங்களை அகற்றச் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கூறுகையில், ஜெயலலிதா படத்தை அகற்றுமாறு அரசுக்கு நான் எழுதிய கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
எங்கள் கோரிக்கையின் பின்னணியில் அரசியல் கிடையாது. ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை போட்டு அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தினால் திமுக அதை கண்டுகொள்ளப்போவதில்லை.
ஆனால் அரசு திட்டத்தில் அரசுக்கு சம்மந்தம் இல்லாதவர் படத்தை போடுவது சட்டப்படி தவறு என்று கூறியுள்ளார்.
















