சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் (இந்திய ரூபாய்) விதித்தது.
இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது.
ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஃபாலி நரிமன் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். பின்னர் ஜெயலலிதாவை பிணையில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. 21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜெயலலிதா பிணையில் இன்று மாலை அல்லது நாளை சிறையிலிருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பிணை மனுக்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது.
பிணை வழங்கப்பட்டதை அறித்த ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் கொட்டும் மழையிலும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
















