பெங்களூர் சிறையில் இருந்து இன்று விடுதலையாகிறார் ஜெ.: சிறை வளாகத்தில் 144 தடை உத்தரவு

jayalalitha-new-1-600அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமினில் இன்று விடுதலையாவார் என அவரது வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார். 18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்பட 4 பேர்களும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா உள்பட 4 பேர்களின் ஜாமீன் மனுக்களும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று ஜெயலலிதா உள்பட 4 பேர்களுக்கும் ஜாமீன் அளித்தது.

ஜாமீன் உத்தரவு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு நகலை பேக்ஸ் மூலம் அனுப்ப முயன்றனர். இதற்காக மாலை 5 மணி வரை தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா காத்திருந்தார். வக்கீல்களும், உத்தரவின் நகல் வந்துவிடும் என்றனர். இதனால் கூடுதலாக 5.40 மணி வரை காத்திருந்தார். ஆனால் வரவில்லை. இதனால் அவர் புறப்பட்டு சென்று விட்டார்.

வக்கீல்கள் பி.குமார், மணிசங்கர், செந்தில், அசோகன், செல்வகுமார் ஆகியோர் உத்தரவின் நகலை பெற்றுக் கொண்டு விமானம் மூலம் நேற்று இரவு பெங்களூர் வந்தனர். இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கல் குன்ஹாவிடம் உச்சநீதிமன்ற உத்தரவை வழங்குகிறார்கள்.

நீதிபதி குன்ஹா வழங்குவார். அதை முறைப்படி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ககன்தீப் சிங்கிடம் வழங்கப்படும். அவர் அதை பரிசீலனை செய்த பின் நான்கு பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யும் உத்தரவை பிறப்பிப்பார். பிற்பகல் 1 மணிக்குள் இந்த நடைமுறைகள் முடிந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அதற்கான நகல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினார். அதனால் ஜெயலலிதாவை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை செய்ய இயலவில்லை என வழக்கறிஞர் குமார் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் நகல் மூலம் ஜெயலலிதாவை, சிறையில் இருந்து விடுவிப்பதற்காக ,பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகள் முடிந்து அவர் இன்று விடுதலையாவார் என வழக்கறிஞர் குமார் கூறினார்.

ஜெயலலிதா விடுதலையாவதை ஒட்டி பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் பெங்களூரில் குவிந்துள்ளனர். இதனையடுத்து ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply