வடபகுதிக்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்க்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க நீதிமன்றம் செல்வோம்– TNA

tnalogo2வெளிநாட்டு பிரஜைகள் வடக்கு செல்லத் தடை விதித்தமைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகள் வடக்கிற்கு பயணம் செய்யும் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இந்த உத்தரவிற்கு எதிராக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக இலங்கைத் தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது அடிப்படை உரிமை மீறலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளாகவே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இலங்கைத் தமிழர்கள் வடக்கிற்கு செல்லும் போது பாரிய நெருக்கடிகளையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் தங்களது பூர்வீக நிலங்களுக்கு செல்ல இவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென நிபந்தனை விதிப்பது, அவர்களை அசௌகரியத்தில் ஆழ்த்தும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சொந்தங்களை பார்வையிடுவதற்கு, திருமண வைபவங்களில் பங்கேற்பதற்கு, வேறும் நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு இவ்வாறு தமிழ் மக்கள் வடக்கிற்கு பயணம் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இனி வரும் காலங்களில் குறித்த தமிழர்கள் இரண்டு வீசாக்ளைப் பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்ய ஒரு வீசாவையும், இலங்கையிலிருந்து தமது பூர்வீக நிலமான வடக்கிற்கு பயணம் செய்ய மற்றுமொரு வீசாவையும் பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிககையானது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply