வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு

Mahinda-Rajapaksa1மஹிந்த அரசாங்கத்தின் பத்தாவது வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்.

வரவு செலவுத்திட்டம் தயாரிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விவசாய அமைப்புகள், வாணிப சபைகள், உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துக்களை பெற்றிருந்தார்.

இது தவிர நிதி அமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவும் அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், ஆகியோரை தனித்தனியாக சந்தித்து வரவு செலவுத்திட்டத்திற்காக கருத்துக்கள் பெற்றிருந்தார்.

சகல தரப்பினரதும் யோசனைகள், கருத்துக்கள் என்பவற்றின் அடிப்படையில் இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு அபிவிருத்தி சார்ந்த மக்கள் நல வரவு செலவுத் திட்டமாக இது அமையும் என நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த தேவையான ஊக்குவிப்புகள், ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்தல் என்பன குறித்தும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.

அரச மற்றும் தனியார் துறை ஊழி யர்களின் வருமானம் அதிகரிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாராகியுள்ளதாகவும் அறிய வருகிறது.

வரவு செலவுத்திட்டத்தில் மீன்பிடி, போக்குவரத்து, பெருந்தோட்ட கைத்தொழில், விவசாயம், சுற்றுலா, சிறு, மத்திய உற்பத்தித்துறைகள் தனியார் துறை, சேவை துறை, நிர்மாணத்துறை, வங்கி, நிதி, தொடர்பாடல், கப்பற்துறை சமூக சேவை உட்பட அநேக துறைகளின் மேம்பாட்டிற்கு யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

வரவு செலவுத்திட்ட துண்டு விழும் தொகையையும் பணவீக்கத்தையும் குறைக்கும் வகையிலும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாளை முதல் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் ஆரம்பமாகிறது.

நவம்பர் முதலாம் திகதி வரை முதலாம் வாசிப்பு மீதான விவாதமும் நவம்பர் 1 முதல் 22 வரை குழுநிலை விவாதமும் இடம்பெறும்.

Tags: , ,

Leave a Reply