சிறிலங்கா கிரிக்கட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் மூலம் கிடைத்த பெருந்தொகைப் பணம் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 20:20 கிரிக்கட் தொடரின் பின் இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு சுமார் மூன்று கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக பகிர்ந்தளிக்க இலங்கைக் கிரிக்கட் சபை தீர்மானித்திருந்தது.
அதற்கு ஏதுவாக சர்வதேச கிரிக்கட் கவுன்சிலிடம் இருந்து 2.8 மில்லியன் டொலர்கள் இலங்கைக் கிரிக்கட் சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இதுவரை இந்தப் பணம் கிரிக்கட் வீரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கிரிக்கட் வீரர்களுக்குச் சேர வேண்டிய பணத்தை ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு வழங்க கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் நிஷாந்த ரணதுங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அளுத்கமகே ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
இதன் மூலம் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் தொடர்பான விபரங்களை மூடிமறைத்துக் கொள்ள அவர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் சிங்கள ஊடகங்களின் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















