மாமனிதர் ரவிராஜ் நினைவுப்பேருரை தொடர்பாக தென்மராட்சி வாழ் மக்களின் கண்டன அறிக்கை!

ravirajமுன்னாள் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் தொடர்பான நினைவுப்பேருரை இன்று 06ம் திகதி சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இன்று பி.ப 3.00 மணிக்கு வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் நினைவுப்பேருரையினை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு தொடர்பாக தென்மராட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் மற்றும் அங்கத்தவர்களுக்குகூட அறிவிக்கப்படாத நிலையினில் நிகழ்வு தொடர்பாக வீதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மூலமாகவே அறியக்கூடியதாக இருந்தது.

உண்மையான விடயம் என்னவெனில், மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களை பற்றியே தெரியாத மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் தலைமை தாங்குவதும், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் நினைவுப்பேருரை நிகழ்த்துவதுமே எங்களுடைய தென்மராட்சி மக்களுக்கு வேதனை அளிக்கின்ற விடயமாகவுள்ளது.

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் தன்னுயிரையே எமது தேசத்தின் விடியலுக்காக அர்ப்பணித்தார். அவர்களின் அர்ப்பணிப்பில் தங்களின் அரசியல் சுயஇலாபத்திற்காக கே.சயந்தன் அவர்கள் நினைவுப்பேருரை நிகழ்துவதென்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் மறைவானது பல அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாகிவிட்டது. குறிப்பாக தென்மராட்சி மண்ணின் மைந்தன் மாமனிதர் நடராஜா ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தால் கொழும்பிலும், லண்டனிலும் சுகபோக வாழ்க்கை அனுபவித்து வந்த சுமந்திரன் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்திருக்கமுடியாது.

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களுடன் கூடவிருந்தவர்களுக்கு தெரியாத விசயங்களா சயந்தனுக்கும் சுமந்திரனுக்கும் தெரிந்துவிடப்போகின்றது? இவர்கள் இருவரும் எம் மக்களுக்காக என்றுமே உளத்தூய்மையுடன் செயற்படப்போவதில்லை.

ஏதிர்வரும் தேர்தல்களில் இவர்களிற்கு தக்க பாடம் புகட்டும மனநிலையினில் நாம் உள்ளோம். சயந்தன் அவர்கள் மாகாணசபை உறுப்பினராக வருவதற்கு விரும்பியிராத தென்மராட்சி வாழ்மக்கள், தென்மராட்சி பிரதேசத்தை சேர்ந்த கொழும்பை வதிவிடமாக கொண்ட தேசிய உணர்வற்ற சுயநலவாதியான அவரை கூட்டமைப்பிற்கான ஆதரவென்ற வகையினில் தெரிவு செய்தமையினை இட்டு வேதனைப்படுகின்றோம்.

சயந்தன் அவர்கள் தனது எதிர்கால அரசியலுக்காக சுமந்திரனையும் சுமந்திரன் அவர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இட்டு தென்மராட்சி மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக சயந்தனையும் தன்பக்கம் வைத்துக்கொண்டு அரசியல் நடத்துகின்றனர். இவர்கள் இருவருக்கும் இனி வரும் காலங்களில் தக்க பாடம் கற்பிப்பார்கள் தென்மராட்சி மக்கள்.

சுமந்திரன் அவர்கள் தேசிய பட்டியல் ஊடாக உள்நுழைந்துவிட்டு அரசியலுக்காக தமிழரசுக்கட்சிக்குள் புகுந்து கொண்டவர். அதேபோலவே சூட்சுமமாக உள்நுழைந்த சயந்தன் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவிலும் இடம்பிடித்துவிட்டு மக்களை ஏமாற்றவே இந்த நிகழ்வை அரைகுறை நாளில் நடத்துவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதிலும் கடந்த காலங்களினில் ரவிராஜிற்கான நினைவேந்தல்களை நெருக்கடியான காலத்திலும் முன்னெடுத்த அவரது ஆதரவாளர்களை புறந்தள்ளி முன்னெடுக்கப்படும் இந்நினைவை நாம் புறக்கணிப்பதுடன் அவரது நினைவுதினமான எதிர்வரும் 10 ம்திகதி எமது வீடுகளினில் மனத்திலிருந்து பிரார்த்திக்க அழைப்பு விடுக்கின்றோம்.

தென்மராட்சி பொது அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் தென்மராட்சி வாழ் மக்கள்.
06.11.2014

Tags: ,

Leave a Reply