விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கறுப்புப் பண விசாரணைகள் இன்னும் தொடர்வதாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த குழுவினர் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரித்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர். இது தொடர்பில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் சுவிட்ஸர்லாந்தின் சட்டமா அதிபர் திணைக்களம் இது தொடர்பான மேலதிக தகவல்களை தர மறுத்துவிட்டது. இந்தநிலையில் விடுதலைப் புலிகளுக்கும் செல்வாசுக் நிறுவனத்துக்கும் தொடர்புகள் இல்லை என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து சட்டமா அதிபர் திணைக்கள பேச்சாளர் ஜெனட் பால்மர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பி.டி.துரைராஜா என்பவருக்கு சொந்தமான குறித்த நிறுவனத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக செய்தித் தாள்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இவரின் நிறுவனத்துக்கே, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் தூதரக இல்லத்தின் புனர்நிர்மாணப் பணிகள் வழங்கப்பட்டன. 2009இல் இந்த பணிகள் வழங்கப்பட்டபோது, துரைராஜா மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருக்கவில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அத்துடன் அவர், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என்றும் பீரிஸ் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
















