மலேசிய முன்னாள் பிரதமரிடம் 4 மணிநேரம் விசாரணை : மொடல் அழகி கொலை வழக்கிலும் விசாரணை

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அரச பணம் 680 மில்லியன் டொலர்களை தனது சொந்த வங்கி கணக்கில் முதலீடு செய்த ஊழல் வழக்கில் நேற்று 4 மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

மலேசியாவின் 14ஆவது பாராளுமன்ற தேர்தலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து 92 வயதான மகாதிர் முஹம்மது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடு செய்து அத் தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மாற்றி விட்டதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

குற்றச்சாட்டை தொடர்ந்து நஜிப் ரசாக் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக இருந்த மகாதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சி தலைவர் பதவியையும் நஜிப் ரசாக் ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டது.

நஜிப் ரசாக் வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் பொலிஸார் அதிரடி சோதனைகள் நடத்தி, அங்கு இருந்து பணக்கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகளை மீட்டுள்ளனர்.

இந் நிலையில் நேற்று நஜிப் ரசாக் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்நாட்டின் ஊழல் தடுப்பு கமிஷன் சம்மன் அனுப்பியிருந்தது.

இதைதொடர்ந்து நேற்று ஊழல் தடுப்பு கமிஷனர் முஹம்மது ஷுக்ரி அப்துல் முன்னர் ஆஜரான நஜிப் ரசாக்கிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் அலுவலகத்தின் வெளியே கூடியிருந்த செய்தியாளர்களை சந்தித்த நஜிப் ரசாக்,

“வரும் வியாழக்கிழமை நடைபெறும் விசாரணையிலும் ஆஜராவேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மலேசியா நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மொடல் அழகி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை தொடர்புப்படுத்தி மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!