தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் தேவை என கடந்த சில நாட்களுக்கு முதல் நான் எழுதிய கட்டுரைக்கு பல வரவேற்புக்களும்,எதிர்ப்புகளும் வந்த நிலையில் உள்ளன.உண்மையில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் ஏதாவது ஒரு நல்ல தீர்வினை தமிழ் மக்கள் அடைவார்கள் என்பது தான் என்னுடைய கருத்து.
ஒரு நண்பர் என்னிடம் கருத்து ஒன்றை முன் வைத்தார் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அவர் ஒரு சிங்கள இனத்தை சேர்ந்த பௌத்தராக இருக்க வேண்டும் என்றும் அவரின் கருத்துக்கள் என்றும் அதனால் உங்களுடைய இந்த எதிர்பார்ப்பு இலங்கையில் என்றைக்குமே சாத்தியபடமுடியாததொன்று.
காரணம் இலங்கையில் யாரால் பிரதம மந்திரியாக அல்லது ஜனாதிபதியாக வரமுடியும் என்பதுபற்றி.
இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, இலங்கையின் பிரதம மந்திரியாக அல்லது ஜனாதிபதியாக வருபவர்,பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள இனமாகவும், அதேநேரம், பௌத்த மதத்தவராகவும் இருக்கவேண்டும் என்பது இலங்கை அரசியல் அமைப்பு சட்டம்.
இதன் காரணமாகதான் பரம்பரை பரம்பரையாக புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ பாதிரிவேதகராக இருந்த கண்டி அரசபரம்பரை சிங்களவரான S.W.R.D.பண்டார நாயக்க ( சந்திரிக்கா பண்டார நாயக்கவின் தந்தை ),தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பதற்காக, தானும் தன் மனைவி பிள்ளைகளும் பௌத்த மதத்துக்கு மாறி, அதன்பின் தேர்தலில் போட்டியிட்டு பிரதமர் ஆனார்.
ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் நான் கூறியது தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று அல்ல . தமிழர்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்பதே தவிர தமிழர் ஓருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அல்ல.
இன்று இலங்கையில் நடக்கும் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை சற்று ஆழமாக பாருங்கள் வாக்களித்த மக்கள் எங்கோ இருக்க அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்ற படி முன்னுக்கு பின் முரணான கருத்துக்களும் தங்களால் ஒரு தீர்மானம் எடுக்க முடியாத நிலையை உருவாகியுள்ளமை யாவரும் அறிந்ததே.
அது போன்று இன்று சிங்கள பேரினவாதம் சிறுபான்மை மக்களின் வாக்குகள் அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளமையும் தெட்டத் தெளிவாக விளங்குகின்றது .
இது எமக்கு கிடைத்த அறிய சந்தர்ப்பம்,இலங்கையில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த எவர் ஆட்சிக்கு வந்தாலும் எமக்கு ஒன்றும் ஆக போவதில்லை என்று தெரிந்தும் தமிழர்கள் ஏன் ஒரு வேட்பாளரை நிறுத்தி பார்க்ககூடாது, ஒரு வேலை நிலைமைகள் மாறக்கூடிய வாய்ப்புக்கள் வரலாம் என்பதற்காகவே இந்த கருத்தை முன் வைத்தேன் .
இருந்தும் எம்மை போன்று ஊடகவியளார்களும் சாதாரண பாமர மக்களும் தான் இதை விரும்புகின்றோமே தவிர எம்மால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் தலைமைகள் மில்லியனுக்கும்,பில்லியனுக்கும் துணை போன மாதிரியே தற்போது உள்ள நடவடிக்கைகள் காணப்படுகின்றது .
கட்சியில் உள்ள தலைமைகளுக்கு தெரியாமல் சுயமான அறிக்கைகள் விடுவதும் ஏதோ இவர்கள் மக்களுக்கு ஆணை இட்டபடி நடந்த கொள்வதும் போன்று மயாஜால அரசியலே இன்று இலங்கையில் இருக்கின்றது.
ஆகவே எமக்கும் பலம் உண்டு என்பதை உலகுக்கு எடுத்து காட்ட வேண்டுமாயின் இலங்கையில் பலமான தமிழ் பொது வேட்பாளர் அவசியம் என்பதே எனது கருத்து.
இது போன்ற விடயங்களுக்கும் தமிழ் தலைமைகள் இந்தியா போன்ற நாடுகள் சொன்னால்தான் நாங்கள் முடிவு எடுக்க முடியும் என்றால் இவர்கள் எல்லாம் ஏன் அரசியல் வாதிகளாக வரவேண்டும் .
ஆனால் தமிழ் மக்கள் இனியும் முட்டாள்கள் ஆக வேண்டாம், இது உங்களது உரிமை சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனக்கு இது வரைக்கும் விளங்கவில்லை இவர்களின் அமைதி எதற்காக என்று சிங்கள பேரினவாதிகள் எம்மை தற்போது இலங்கையில் ஒரு இனமாக மதிப்பதற்கு கூட விரும்பாத போது எதற்காக நாம் இவர்களை ஆதரிக்க வேண்டும் .
இலங்கையின் ஆட்சியாளர் யார்? என்பதை தீர்மானிப்பது சிங்கள மக்கள் அல்ல, தமிழ் மக்களே,தமிழ் மக்களிடமே அந்த பலம் இருக்கிறது, என்பதை அவர்களுக்கு நிரூபிப்பதோடு அது ஒரு வரலாற்றுப்பதிவாகவும் அமைந்துவிடும்.
இங்குதான் தமிழர்கள் தமது அரசியல் பலத்தை, பேரம் பேசும் சக்தியை சிங்கள தலைமைகளுக்கு உணர்த்தப்போகிறார்கள். அவர்களை தமது காலடிகளுக்கு தமிழர்கள் கொண்டு வரப்போகிறார்கள். “அந்த இரண்டாவது வாக்கை எம்மவர்க்கு அளியுங்கள்” என்ற வேண்டுதலோடு மேற்குலக நாடுகளின் சுட்டுவிரல் யாராவது ஒருவரை நோக்கி நீளும். அந்த சுட்டுவிரல் யாரை நோக்கி நீண்டதோ அத்தரப்பும், தமிழ் தேசியக்கூட்டமைப்பும் சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஒரு (இரகசிய) கனவான் ஒப்பந்தத்துக்கு செல்ல முடியும்! அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கான பிரகாசமான வாய்ப்புகளும் உண்டு.
எனவே மூன்றாவது வேட்பாளரை களமிறக்கும் முடிவில், தமிழ் மக்களின் நலன், பலம், பாதுகாப்பு, பேரம் பேசும் சக்தி, கிடுக்குப்பிடி போடும் திறன் எல்லாம் ஒருங்கே இருப்பதால்தான், இங்கு “மூன்றாவது வேட்பாளர்” தெரிவு முக்கியத்துவம் பெறுகிறதே தவிர, சிங்கள பேரினவாதத்துக்கு ஒரு போதும் துணை போகாது என்பதை தமிழர்கள் எடுத்து காட்ட இதுவே சிறந்த தருணம் .
இது எம்மை போன்றவர்களின் நிலைப்பாடு ஆனால் தமிழ் தலைமகள் தங்களது பதவிகளுக்கு, கதிரைகளுக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று பயப்படுகின்றதோ தெரியவில்லை . எது நடந்தாலும் இலங்கை தமிழ் மக்கள் சிந்தித்து சிறந்த முடிவு எடுப்பது நல்லது தமிழ் தலைமைகளின் மயாஜால அரசியலை மக்களும் தற்போது நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்.
இவர்களுக்கு மக்கள் வழங்கும் இறுதி வாய்ப்பு இதுவாகவே இருக்கும் .
-எஸ்.கே
















