பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது; வவுனியா கூட்டத்தில் மஹிந்த காட்டம்

Prabhakaran4“பிரபாகரன் அன்று கேட்டதையே தமிழ்த் தேசியக் கூடடமைப்பினர் இன்று கேட்கின்றனர். புலிகள் இந்த நாட்டைப் பிரிப்பதற்குப் பேசியது போன்று இப்போது கூட்டமைப்பினரும் பேசுகின்றனர்.

இதனை ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ­ நேற்று வவுனியாவில் வைத்து தெரிவித்தார்.

“புறம்பான ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துத் தனிநாட்டை ஈழத்தை ஏற்படுத்தப் போகின்றோம் என்று இனவாதத்தைக் கிளப்பி இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய இயலாது” என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ பங்கேற்ற வடக்கின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வவுனியா வைரவப் புளியங்குளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்.

“இந்தப் பிரதேசத்தை விடுவித்து சுதந்திரமாக இருக்கின்ற சூழ்நிலையில்தான் இந்தத் தேர் தலை நடத்துகின்றோம். உங்களுக்கு கடந்த காலச் சரித்திரத்தை நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினோம்.

நாடாளுமன்றத் தேர் தலை நடத்தினோம். பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்தினோம். இப்போது மாகாண சபைகளுக்கான தேர் தலை நடத்துகிறோம். நாங்கள் அனைவரும் ஜனநாயக ரீதியில் ஒருமித்து செயற்படு வதற்காக அனைவரும் முன் வரவேண்டும்” என்று தனது உரையில் கூறினார் ஜனாதிபதி.

“ஏனைய மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அத்தனை அதிகாரங்களையும் இந்த மாகாணத்துக்கு கொடுத்திருக்கின்றோம். இப்போது சிலரது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்க்கும் போது நான்கு வருடங்களுக்கு முன்னர் பலர் கேட்டுக் கொண்டிருந்த அதே வேண்டு கோளையே இப்போது விடுக்கின்றனர்.

உங்களுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நாட்டைத் துண்டு துண்டாக கூறுபோடுவதற்குப் பிரபாகரனுக்கு எவ்வாறு இடளிக்கப்படவில்லையோ அவ்வாறே எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை” என்றார் மஹிந்தா.

“ஜனநாயகத்தை மதிக்கின்ற தமிழ்தலைவர்களை ஒவ்வொருவராகக் கொன்றார்கள். எதிர்காலத்தில் அத்தகைய சூழ்நிலை ஏற்பட இடமளிக்க முடியாது. எமது அரசு இனவாதத்தை எதிர்க்கின்ற, வெறுக்கின்ற அரசு. நாம் எல்லா மதங்களையும் மதிக்கின்றோம்.

எல்லா இனங்களும் அவர்களுடைய கலை, கலாசார, பாரம்பரியங்களைப் பாதுகாத்து வாழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது எமது கடமையாகும்” என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

“இந்த நாட்டிலுள்ள எல்லா இனமக்களும் ஒன்று சேர்ந்து நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை அபிவிருத்தி செய்ய ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும். இனபேதம், மதபேதம், குல பேதம் பாராது ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரன் அன்று சொன்ன கதையைத் தான் இன்று சொல்கிறது. புலிகள் இந்த நாட்டைப் பிரிப்பதற்குப் பேசியது போன்று இப்போது கூட்டமைப்பு பேசுகின்றது. அதில் எவ்வித அர்த்தமுமில்லை. இன்றிருக்கக்கூடிய இந்த சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கு எவரும் விரும்பமாட்டார்கள்.

நான் தென்னிலங்கைக்குப் போனால் அங்குள்ள சிறுவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அதேபோல் இங்குள்ளவர்கள் தாம் சிங்களம் படிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களைத் தாருங்கள் என்று கேட்கிறார்கள். இதுதான் இன்று மக்களின் உள்ளத்திலுள்ள கருத்து.

இந்தப் பகுதிகளில் காணிப் பிரச்சினைகள் இருக்கின்றது. வீட்டுப் பிரச்சினை இருக்கின்றது. பிரச்சினைகள் இங்கு மட்டுமல்ல தென்னிலங்கையிலும் உள்ளன.ஏன் நாடு முழுவதிலுமே உள்ளன. இவற்றை எல்லாம் பேசித் தீர்க்கமுடியும். அதனை ஒரே நாளிலேயோ அல்லது ஒரு வருடத்திலேயோ செய்து விடமுடியாது. பல வருடங்களாக அடக்கப்பட்ட முடக்கப்பட்ட பிரச்சினைகளை நாம் மெல்ல மெல்ல தீர்த்து வருகின்றோம்.” என்று அவர் மேலும் கூறினார்.

Tags: , , ,

Leave a Reply