ராஜீவ் காந்தியை கொலை செய்யுமாறு பிரபாகரன் உத்தரவிட்டார் – குமரன் பத்மநாதன்

kpஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்யுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உத்தரவிட்டதாக, புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இந்தியா தம்மை கொலை செய்யப்போவதாக பிரபாகரன் உணர்ந்ததாகவும், இதனால் ராஜீவ் காந்தியை கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா அமைதி காக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்பி வைத்ததன் பின்னர் இந்தியாவும் புலிகளும் விரோதிகளாக மாறியதாகக் குறிப்பிட்டுள்ளார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரம் மற்றும் பென்டகன் மீதான தீவிரவாதத் தாக்குதல்கள், சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஓர் பின்னணியை உருவாக்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கைது செய்யப்பட்டதன் பின்னர் தம்மை சரியான முறையில் நடத்தி புனர்வாழ்வு அளித்மைக்காக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களில் காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 80களில் தமிழக அரசாங்கம் நேரடியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரையில் மத்திய அரசாங்கமும் புலிகளுக்கு ஆதரவாகவே செயற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிதி திரட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் புலிகள் நிதி திரட்டியதாகத் தெரிவித்துள்ளார். எனினும், ஐரோப்பாவும் கனடாவுமே பிரதான நிதி திரட்டல் வழிகளாக அமைந்தன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமையே தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கான திருப்பு முனையாக அமைந்தது என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

GTN-

Tags: , , ,

Leave a Reply