“கோதபாய, என்னைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை மேற்கொள்கின்றார்” எனக் கூறினார் கருணா – விக்கிலீக்ஸ்

GotaKarunaபாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தம்மைப் பயன்படுத்தி அச்சுத்தல்களை மேற்கொண்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் குறிப்பிட்டதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாவுடனான தொடர்புகளை அரசாங்கம் மறுத்து வந்த போதிலும், கருணா அம்மானின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பயன்களையும் அவரது நடவடிக்கைகளையும் கோதபாய ராஜபக்ஷ புகழ்ந்து பாராட்டியுள்ளதாக அசோசியடட் பிரஸ் ஊடக நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பொறுப்பாளர் மெத்தீயூ ரோசன்பெர்க் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கோதபாய ராஜபக்ஷவுடனான தொலைபேசி குறித்த குரல் பதிவு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2007ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கினால், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி கோதபாய ராஜபக்ஷ, நேரடியாக டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியைக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, பிரசூரமான செய்தி குறித்து கருணா அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியை சம்பிக்கா லியனாரச்சிக்கு பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு அழைப்பு எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் தொடர்பில் பிரசூரமான கட்டுரை தொடர்பில் கருணா கடும் கோபமடைந்துள்ளதாக கோதபாய தெரிவித்துள்ளார்.

கட்டுரையின் ஆசிரிரையும், பத்திரிகை ஆசிரியையும் கருணா கொலை செய்யக் கூடுமென பாதுகாப்புச் செயலாளர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பத்திரிகை ஆசிரியை லியனாரச்சியை பரத்தை என இழிவாகப் பேசியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், பத்திரியை ஆசிரியை கருணா அம்மானுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து செய்தி குறித்து விளக்கிய போது, தாம் எவரையும கொல்லப் போவதில்லை எனவும், கோதபாய ராஜபக்ஷ தம்மைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் கருணா குறிப்பிட்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் பிளக் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

நன்றி: Colombotelegraph, விக்கிலீக்ஸ், GTN

Tags: , ,

Leave a Reply