நேற்றிரவு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளாரனான ஆனந்தி அரச ராணுவத்தினதும் அதன் அடிவருடிகளினதும் தாக்குதலில் இருந்து தப்பியிருக்கிறார். ஆனால் அவரது ஆதரவாளர்களும் விசாரிக்கச்சென்ற பவரல் அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரும் மோசமான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுள் ஆனந்தியும் சிறீதரனும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களது நிலைப்பாடுகளுக்காக அரச உளவுப்படைகளினாலும் இராணுவத்தினாலும் குறி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இலங்கையின் அரசியல்யாப்புக்கு முரணாகாத வகையில் செயற்படுகிறவர்களைத் தாக்கவேண்டிய தேவை தற்போதைய இனவாத அரசாங்கத்திற்கு மட்டுமல்ல அன்றைக்குக் காலிமுகத்திடலில் தமிழ்த்தலைவர்கள் சத்தியாக்கிரகம் இருந்த போதே இலங்கையின் இனவாத அரசாங்கங்களுக்கு ஏற்பட்டு விட்டது.
ஆனந்தி இரண்டு விதங்களில் முக்கியமானவராகி இருக்கிறார். ஒன்று அவர் விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தலைவர் ஒருவரின் மனைவி. இரண்டாவது இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களின் சார்பாகத் தான் தன் குரலை உயர்த்துவேன் என வெளிப்டையாகவும் அறிவித்துச் செயற்படுகிறவர்.
இன்றுவரை யுத்தத்தில் உயிர்தப்பிப்பிழைத்திருக்கும் முன்னை நாட் புலிகள் அல்லது புலி ஆதரவாளர்கள் எவரும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களைப் பொதுமக்களின் முன்வைத்து அரசியலில் ஈடுபடுமளவுக்குத் துணியவில்லை. ஆனால் ஆனந்தி துணிந்திருக்கிறார். மேலும் ஆனந்தி இலங்கையின் மாகாண அரசியலுக்குள் நுழைவது அவருக்கு இனிவரும் ஐந்தாண்டுகளுக்கு எங்கும் ஒலிக்கக் கூடிய குரலை வழங்கி விடும். இது யுத்தக்குற்றங்களில் ஈடுபட்ட இராணூவத்திற்கும் அரசாங்கத்திற்கும் எப்பொழுதும் தலையிடியாகவே இருக்கும். மேலும் இவ்வரசாங்கத்திற்கும் இனவாத அரசு அமைப்புக்குமெதிரான குரல்களை உயர்த்த விரும்புவர்களுக்கு ஆனந்தியைப்போன்றவர்கள் ஆதர்சமாகவும் அமைந்து விடக்கூடும் என்ற பயமும் அரச ராணுவத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும் இருக்கக்கூடும்
முன்னாள் போராளிகளுக்கு மரணத்தை விட்டால் அரசை அண்டி வாழ்வதன்றி வேறெந்த வழிகளும் இருக்கக்கூடாதென்பது போலவே இவ்வரசாங்கத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இருப்பதை நடைமுறைகள் உணர்த்துகின்றன.
அண்மையில் யாழ்பாணத்திற்கு வந்திருந்த பசில் ராச பக்ச ஆனந்தியின் குரலுக்குப்பதில் அளிக்கும் விதமாக காணாமற் போனவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாமெனக் கூறி இருந்தார். ஏன் தமிழர்கள் மத்தியிலும் கூட காணாமல் போனவர்களையும் செத்துப்போனவர்களையும் வைத்து அரசியல் செய்வதில் அர்த்தமில்லை என்று வெளிப்ப்டையாகவே பேசப்படுகிறது.
செத்துப்போன எனது அப்பாவை அல்லது அம்மாவை அல்லது நெருக்கமான ஒரு உறவை இன்னமும் நினைத்து அழுதுகொண்டா இருக்கிறேன். நடக்கவேண்டியதைப் பார்க்கிறேன்தானே! பிறகென்ன காணாமல் போனவர்களும் மரணித்தவர்களும்… எனச் சில தமிழர்கள் கோபப்படவும் செய்கின்றனர்.
முப்பத்தைந்து வருடத்துக்கு முன்பு மாரடைப்பு வந்து இறந்து போன எனது அப்பாவின் படம் இன்னமும் முன்னறையில் தொங்குகின்றது. அவரை நினைத்துக் கவிதை கூட எழுதியிருக்கிறேன். எனது அப்பாவின் மரணத்தின் பின் எனக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவின் நினைவுகள் என்னை ஒவ்வொரு நாளும் தொடர்கின்றன. முன்னறையில் அவரின் படத்தை நிமிர்ந்து பார்க்கிற ஒருவொரு நாளும் இந்த உணர்வுகளுக்குப் புது அர்த்தங்கள் உருவாகின்றன. இப்படி ஆயிரக்கணக்கான மரணித்த காணாமல் போன மனிதர்களின் புகைப்படங்கள் எங்கள் வீடுகளில் தொங்குகின்றன. ஒவொரு நாளும் அவற்றைத் தாண்டிச்செல்கிற மனித சீவன்களின் உணர்வுகளின் வதையை யாருணர்வார்.
இதென்ன வதையும் சிதையும் இது தனிமனித உணர்வு; தனிமனிதப்பிரச்சனை என நீங்கள் நினைக்கக்கூடும் அல்லது இது தேர்தல் காலம் அனுதாபத்தைப் பெறுவதற்கு வாக்குகளைப்பெறுவதற்கு சிலவேளை பயன்படக்கூடும் என்றும் ஒரு சிலர் கருதக்கூடும். ஆனால் மரணித்தவர்களும் காணாமல்போனவர்களும் எமது சமூகத்தில் பெறும் பாத்திரம் தனிமனித நிலையிலும் சமூக நிலையிலும் வித்தியாசமானதாகும். இதற்கு தெளிவான அரசியற்பரிமாணம் இருக்கிறது. மரணித்தவர்கள் எதற்காக மரணித்தார்கள்; எப்படி மரணித்தார்கள் என்ற கேள்வியில் அது தொடங்குகிறது. காணாமல் போனவர்கள் ஏன் காணாமல் போனார்கள் எப்படிக்காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்ற கேள்வியில் இருந்து அது வருகிறது. வீதியைக் கடக்க வெளிக்கிட்ட பூனை வாகனத்தில் அடிபட்டுச் செத்தது போன்று இவர்கள் சாகவில்லை. அம்மா அரிசிப்பானைக்குள் ஒளித்து வைத்த இனிப்பு காணாமல் போனது போல இவர்கள் காணாமல் போகவில்லை.
அடக்குமுறையைக் கடக்க முயன்ற போது அதிகார வாகனங்களால் திட்டமிட்டு நரிக்கப்பட்டார்கள் அல்லது அள்ளிச்செல்லப்பட்டார்கள். இவர்களது சாவிலும் காணாமல்போதலிலும் அரசுக்கு அல்லது இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு இருந்த இருக்கிற பொறுப்புக் கூறல் என்பது முக்கியமானது.
ஒரு நாட்டில் ஒரு அரசு மனிதர்களை தனக்கிருக்கிற பொறுப்பை மீறி அவர்களைக் காணாமல்போகவும் மரணிக்கவும் செய்கிற போது அது அதன் நியாயாதிக்கத்தை இழக்கிறது. இது விடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கும் பொருந்தும். சட்ட ரீதியான அங்கீகாரம் இவற்றுக்கு இல்லாத போதும் விடுதலை அரசியலின் அறம் சார்ந்து அப்பொறுப்பு வருகிறது.
எனவே மனிதர்களின், அரசொன்றின் அறத்தின் விதிகளுக்குள் அடங்காத மரணம், பலவந்தமான காணாமல் போதல்கள் போன்றவை பற்றிய தெளிவும் வலியுறுத்தலும் எமது இடையறாத போராட்டத்தின் ஒரு பகுதியாகிறது.
நான் மேற் கூறிய பரிமாணத்தின் ஒரு பகுதியைத் தனது இழப்பின் வழி உணர்ந்த ஆனந்தி அதனை அரசியலாக்குகிறார். இதற்கு உண்மையான சனநாயக நாட்டில் நிச்சயம் வெளி இருக்க வேண்டும். இலங்கையில் குறிப்பாக இனப்படுகொலை புரிந்த யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட ஒரு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு பகுதியில் இது சாத்தியமில்லை என்பதையே ஆனந்தி மீதான தாக்குதல் தெளிவு படுத்துகிறது.
இறுதி யுத்தத்தில் காணாமல் போன தன் கணவன் உட்பட அனைவருக்காகவும் குரல் கொடுக்கும் ஆனந்தி அனைத்து காணாமல் போனவர்கள் தொடர்பாகவும் உணர்வாராக இருந்தால் அவர் மிடுக்கு முழுமை பெறும்.
இறுதியாக ஒன்று. காணாமல் போனவர்களை வைத்துக் காடாற்ற முடியாது; கல்லறையில் ஒளியேற்ற முடியாது. அந்தியேட்டி வைக்க முடியாது; ஆண்டுத்திவசம் கொடுக்க முடியாது; ஆற்றுப்படவும் முடியாது. அரசியல்தான் செய்யலாம்.
தேவ அபிரா, GTN-
















