ஆணமடுவை இளைஞனுக்கு மூன்று முறை கொரோனா தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய இளைஞனுக்கு, அதன் பின்னர் மேலும் இரண்டு தடவைகள் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனுக்கே இவ்வாறு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஒகஸ்ட் 18ம் திகதி நாடு திரும்பிய குறித்த இளைஞர், வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது முதன்முறையாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டது.

பின்னர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பிய நிலையில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தார். பின்னர் செப்டம்பர் 17ம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இதன்போது மேற்கொண்ட பி.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று இருப்பது மீண்டும் தெரியவந்தது.

அதன்பிறகு குறித்த இளைஞர் இரனவிலா கொவிட் -19 சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார். மீண்டும் கொரோானா தொற்றில் இருந்து மீண்டு இரண்டாவது முறையாக வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், மீண்டும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இருப்பினும் மூன்றாவது முறையாக நோய்வாய்ப்பட்ட அவர், மீண்டும் ஒக்டோபர் 02ம் திகதி சிலாபத்தில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதன்போதும் மூன்றாவது முறையாக அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இலங்கையில் ஒரே நபர் மூன்று முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்ட சந்தர்ப்பம் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!