இலங்கையின் தலைநகர் கொழும்பில் நகரத்தின் முக்கிய பகுதியாக கொம்பெனித் தெரு அமைந்துள்ளது. அங்கே அரை நூற்றாண்டுக்கு மேல் வாழ்ந்த மக்களை அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தரவிட்டது. அவ்வாறாயின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ள நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு ஈடான நியாயமான நஷ்டஈடு வழங்கும் புதிய திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நாட்டின் பாதுகாப்புச் செயலரும், ஜனாதிபதியின் சகோதரரும், உச்ச அதிகாரம் படைத்தவருமான கோத்தாபய ராஜபக்சவின் பொறுப்பிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இலங்கையின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கொம்பெனித் தெரு பகுதியிலுள்ள ஏழு ஏக்கர் நிலத்தை இந்தியாவின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் 600ற்கும் அதிகமான குடும்பங்கள் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்தபோது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
வெளியேற்றப்படும் குடும்பம் ஒன்றுக்கு 45 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் முன்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. எனினும் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு புதிய தொகையாக 15 லட்சத்தை வழங்க நகர அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்த நஷ்ட ஈடு நியாயமானது அல்ல எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றத்திடம் தாம் கோரியிருந்ததாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
புதிய நஷ்ட ஈட்டுத் திட்டம் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள் பற்றி எதிர்வரும் 30ம் திகதி அரசாங்கம் நீதிமன்றத்திடம் விபரம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
GTN-
















