வடக்கு மக்களின் தீர்ப்பிற்கு மரியாதை அளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார். 13ம் திருத்தச் சட்;டத்தின் சகல அதிகாரங்களையும் உரிமைகளையும் வட மாகாணசபைக்கு அரசாங்கம் வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையில் படையினரின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும் இதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை அரசாங்கம் கையாளும் விதத்தையும், இராணுவ பிரசன்னத்தையும் எதிர்த்தே வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்கள் பிரிவினைவாதத்தை விரும்பவில்லை. சுய கௌரவத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் தங்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென விரும்புகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரிவினைவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் தமி;ழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியும் என அரசாங்கம் கருதிவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு கால தாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமென இந்தயியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
















