வடமாகாணத் தேர்தல் காலத்தில் இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் பல்வேறு வகையில் இருந்ததாக, பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
இது குறித்து பொதுநலவாய நாடுகளின் சார்பிலான கண்காணிப்புக் குழுவுக்கு தலைமை தாங்கிய கென்யாவின் முன்னாள் துணை ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது:
வடக்கு மாகாணத்துக்கான தேர்தல் காலத்தில் மக்கள் மீது இராணுவம் பல்வேறு வகையான மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை அவதாணிக்க முடிந்தது.
அத்தோடு ஆளும் கட்சி சார்பாக போட்டியிட்டவர்கள், அரச நிர்வாக கட்டமைப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாகவும் பல்வேறு முறைப்பாடுகள் அங்கே பதிவாகியுள்ளன.
இதேசமயம், தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டவிதம் குறித்தும், இலங்கையின் தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகள் சிறப்பாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.
பல்வேறுவிதமான அச்சுறுத்தல்களையும் புறந்தள்ளிவிட்டு பெரும்பான்மையான வாக்காளர்கள் தைரியமாக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், இலங்கையின் மாகாணசபைத் தேர்தல்களை கண்காணித்த சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்களின் குழுவின் தலைவருமான கோபாலசுவாமி, வடக்கில் இராணுவ அச்சுறுத்தல் உள்ளமை முற்றிலும் உண்மை என கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
















