முள்ளிவாய்க்காலுடன் போராட்டம் ஓயவில்லை!

refugee3அதனைத் தேர்தலில் நிரூபித்துள்ளனர் வடக்கு மக்கள்வடக்கு, கிழக்கு உரிமைப் போராட்ட அரசியலுக்கு புள்ளடியால் வலுச்சேர்த்துள்ள வட மாகாண மக்களுக்கு மலையக சிவில் அமைப்புக்களான அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வுமையம் என்பன வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் முள்ளிவாய்க்காலோடு முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும், அரசியல் போராட்டம் தொடரும் என்ற தெளிவான செய்தியை வடக்கு மக்கள் உள்நாட்டிற்கும் உலகிற்கும் விடுத்துள்ளனர் என்றும் அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வடக்கு மற்றும் மத்திய மாகாண தேர்தல் குறித்து அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“உலகமே இன்று மனித உரிமைகள் பற்றி குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் யுத்தத்தால் பல இழப்புக்களை எதிர்கொண்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் வட மாகாண மக்களுக்கு கடந்த 21ஆம் திகதி தேர்தல் பரீட்சை நடத்தப்பட்டது.

25 வருடங்களுக்குப் பின்னர் வடக்கில் இடம் பெற்ற தனித் தேர்தலில் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை வென்று வட மாகாணத் தமிழ் மக்கள் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளனர்.

அம்மக்களுக்கு அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வுமையம் ஆகிய நாம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். வட மாகாண வெற்றியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் வாழும் மலையக மக்களுக்கும் பங்குண்டு என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வட மாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறை வேற்ற மக்களின் ஆணை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என மலையக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இதேவேளை, மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 14 உறுப்பினர்களை தமிழர்கள் தெரிவு செய்துள்ளனர். அவர்களுக்கும் நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இது தனி நபருக்கோ, கட்சிக்கோ கிடைத்த வெற்றியல்ல. மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். எனவே, தெரிவு செய்யப்பட்ட 14 தமிழர்கள் மக்களுக்கான அரசியலை செய்ய வேண்டும். இந்தப் பயணத்தில் மலையக தேசியம் காக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்பதோடு அதில் நாமும் இணைந்து கொள்வோம் என அறிவிக்க விரும்புகிறோம்” என்றுள்ளது.

Tags: ,

Leave a Reply