தமிழ் செயற்பாட்டாளர்களை ஒடுக்க முற்படுகிறது அரசு!

இலங்கை அரசு தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி தமிழ் செயற்பாட்டாளர்களையும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்க முற்படுவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் –

மனித உரிமைகள் சிவில் சமூக செயற்பாட்டாளரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான சபாரட்ணம் சிவயோகநாதனின் திராய்மடு மட்டக்களப்பில் உள்ள இல்லத்திற்கு நேற்று சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த இரு புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் அவரிடம் ஒன்றரை மணித்தியாலங்கள் கடுமையான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றீர்களா? என்ற கோணத்திலும் ஸ்ரீலங்கா அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றீர்களா? என்ற கோணத்திலும் சிவயோகநாதனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் அவருடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது வெளிப்படையாக ஜனநாயக வெளியில் செயற்படும் ஒருவருக்கு வழமை போலவே பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு அரசினால் மேற்கொள்ளப்படும் முயற்சியே.

மனித உரிமைகள் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தமது சர்வாதிகார அராஜக ஜனநாயக விரோத ஆட்சியை முன்னெடுக்க அரசு நடத்தும் கபட நாடகமே இந்த விசாரணை நடவடிக்கை.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மிக வேகமாக பரவி பல உயிர்களை பலியெடுத்து வரும் அவலம் நிறைந்த சூழலில் அனைவரும் தம் வாழ்வைக்குறித்து கலங்கி நிற்கும் இவ்வேளையில் அரசு தனது அராஜகத்தையும் ஒடுக்குமுறையினையும் எவ்வித மாற்றமோ மனச்சாட்சியோ இன்றி தொடர்கின்றது.

எனவே அரசின் இந்த அராஜக ஜனநாயக விரோத செயற்பாட்டை குறிப்பாக தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்வதையும் விசாரணைகள் செய்வதையும் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறான விசாரணை செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, மனித உரிமைகள், சிவில் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளுக்கு உத்தரவாதமளிக்குமாறு அனைத்துலக மனித உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கும் நீதிக்குமான அமையங்கள், மற்றும் ஐ.நா. மன்றத்தினையும் மிக அவசரமாகவும் அவசியத்துடனும் கோரி நிற்கின்றோம்’ என வேலன் சுவாமிகள் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!