உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றி மீண்டும் காணி அதிகாரத்தை வட மாகாண சபைக்கு மஹிந்த அரசு வழங்க நடவடிக்கை எடுக்க தவறினால் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று அங்கு முதல் அமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்பே மாகாண சபையின் காணி அதிகாரத்தை இலங்கை நீதிமன்றம் பறித்திருக்கிறது. காணி மீதான அதிகாரம் இனி மத்திய அரசுக்குத்தான் என இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தமிழர்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படக்கூடாது என ராஜபக்சே வலியுறுத்தி வந்த நிலையில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. அனைத்து மாகாண சபைகளுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்றாலும் தமிழர்களுக்கு எதிராகவே இந்தத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி மீண்டும் காணி அதிகாரத்தை வடக்கு மாகாண அரசுக்கு வழங்க இலங்கை அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒக்டோபர் முதல் வாரத்தில் மேற்கொள்ளவிருக்கும் தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்யவேண்டும், நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டோமென இப்போதே மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















