சர்வதேச முதியோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டிய முதியோர்கள் பலர் இன்று மதிப்பாரற்று அநாதரவான நிலையில் வாழ்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். தத்தம் பிள்ளைகளை கண்ணை இமை காப்பதுபோல காத்து, அறிவூரட்டி, அவரவர் சொந்த காலில் நிற்பதற்கு வலுச்சேர்ப்பவர்கள் பெற்றோர். அவர்கள் முதியோரானதும், அந்த நன்றிக் கடனையாவது செய்ய வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு உரியதல்லவா? தற்காலத்தில் எத்தனை பிள்ளைகள் தமது பெற்றோர்களை பொறுப்பாக தமது வீட்டில் வைத்து கவனிக்கிறார்கள். இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் பெரியவர் ஒருவரும் யாருமின்றி பொலன்நறுவை வீதியில் இரண்டு வருடங்களுக்கு முன் தனித்து விடப்பட்டவர். மழை, வெய்யில் தாக்காதவாறு அப்பிரதேசத்தவர்களால் இந்த பெரியவருக்கு ஒரு கூடாரம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
சுருங்கிய தோல்கள், மங்கிய கண்கள், நரைத்த முடி ஆகியவற்றுடன் அனைவரது குடும்பத்திலும் இருக்கின்றனர் முதியோர். வாழ்க்கைப் பயணத்தில் இவர்கள் பெற்ற குழந்தைகளுக்காக உழைத்து, முதிர்ந்த வயதில் தள்ளாடி நிற்கின்றனர். இவர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தை மறக்காமல், அவர்களிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஒக்டோபர் முதலாம் திகதி, சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.
முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் திகதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது. கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும், அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. உலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது, 2050ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதியோரும், குழந்தையும் மனதால் ஒன்று எனக் கூறுவர். ஞாபக மறதி காரணமாக, நம்மிடம் கேட்டவற்றையே திரும்ப திரும்ப கேட்பர். இதற்கு அவர்களிடம் கோபம் காட்டாமல், பரிவுடன் உதவ வேண்டும். முதியோரை இதுநாள் வரை, கவனிக்க மறந்து விட்டாலும், இத்தினத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அவர்களிடம் அன்பு செலுத்த முன் வரவேண்டும். நாமும் நாளை முதியோர் ஆவோம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
இலங்கையில் முதியோர்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டளவில் நூற்றுக்கு 22 வீதமாக அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 1979 முதல் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது.
சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சர்வதேச சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறுகிறது.. உலகில் வாழ்கின்ற மக்களில் 1/3 பங்கினர் சிறுவர்களாகக் காணப்படுகின்றனர். சிறுவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தங்கி வாழ்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
உலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள் கலவரங்கள் இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பாதிப்புக்குள்ளானவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். எனவே தான் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
2012ஆம் ஆண்டு தகவல்படி சர்வதேச ரீதியில் 12 மில்லியன் சிறுவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். சிறுவர்களின் உரிமைகளை பெரியோர்கள் மதித்தும் வலியுறுத்தியும் செயற்படுத்துவார்களேயானால் மட்டுமே சிறுவர்களுக் கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க முடியும். ஓவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு அயலவரும் சிறுவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண வேண்டும். நமது நாளாந்த வாழ்வில் சிறுவர்களை நாளைய சொத்துக்களாக கருதி அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சிறுவர் உரிமைகள் மீறப்படும்போது பல்வேறு சட்ட கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. சகல பொலிஸ் திணைக்களங்களிலும் இயங்கும் சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட அழைப்பு இலக்கம் 1929 போன்ற பலரிடமும் சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு பொதுமக்கள் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்கும் பட்சத்தில் சிறுவர் உரிமை மீறல்களை இல்லாதொழிக்கலாம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் மற்றும் முதியவர் குறித்து தற்காலத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நான்காண்டுகளை எட்டுகின்ற போதும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் பல உள, உடல் ரீதியான பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பராமரிப்பார் அற்று, தனிமை, பொருளாதார நெருக்கடி, அரவணைப்பின்மை, சமூக தாக்கங்கள் என பல பிரச்சினைகளுக்கு இவர்கள் இரு சாராரும் முகங்கொடுக்கின்றனர். இதேவேளை சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், துஷ்பிரோயத்துக்கு உட்படுத்துதல் என சிறுவர்களது எதிர்காலம் மீதான பெரும் வடுவை இன்றைய காலம் அவர்கள் மீது திணித்து விடுகிறது. முதியோர்களை வயோதிபர் இல்லங்களில் பிள்ளைகளால் விட்டுச் செல்லும் சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சிறுவர்களின் எதிர்காலத்தை வளம்மிக்கதாக ஒளி பெறச்செய்வதும், முதியோர்களை பாதுகாப்பதும் சமூகத்தின் ஒவ்வொரு பிரஜைகளினதும் பொறுப்பு என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “குடும்பம் உங்களை பாதுகாக்கும்” என்ற தொனிப் பொருளின் கீழ் அம்பாறை சம்மாந்துறை நகர மண்டபத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.
















